Skip to main content

சட்டவிரோத கைது! திருமுருகன் காந்தி மற்றும் சங்கர் தமிழனை உடனடியாக விடுவிக்க வேண்டும்: வேல்முருகன் எச்சரிக்கை

thiru


சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மற்றும் சங்கர் தமிழனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் துப்பாக்கிச்சூடு, சேலம்-படப்பை எட்டுவழிச்சாலை ஆகிய பிரச்னைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு நார்வேயில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமானநிலையம் வந்தடைந்தார் திருமுருகன் காந்தி. அப்போது அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி விமானநிலையத்தில் அவரை சிறைப்பிடித்துள்ளனர்.

சென்னை வேப்பேரி, மைலாப்பூர் காவல்நிலையங்களில் அவருக்கு எதிராக 124 (A) தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறை திருமுருகன் காந்தியை கைது செய்ய பெங்களூரு விரைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, போலீஸை விமர்சித்த சங்கர் தமிழன் என்கிற சங்கரலிங்கம் என்ற வாலிபரை குவைத்தில் இருந்து இந்தியா வரவழைத்து கைது செய்தது தமிழக போலீஸ்! சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.
 

thirua

 

 

கடந்த மார்ச் மாதம் தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி ராஜா - உஷா என்கிற தம்பதியினர் வந்தபோது டிராஃபிக் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நிற்காமல் அவர்கள் சென்றதால் விரட்டிச்சென்று பைக்கை எட்டி உதைத்ததில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். இதையெல்லாம் வலைதளத்தில் பார்த்த சங்கரலிங்கம் போலீஸையும் தமிழக அரசையும் கண்டித்து தன்னுடைய உணர்வுகளை வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இதனால் இவரின் ஃபேஸ்புக் ஐடியைக் கண்டுபித்து நேராக சங்கரலிங்கம் ஊருக்குச் சென்ற போலீசார், அவர் வீட்டாரை விசாரித்து சங்கர் தமிழன் பற்றிய விவரங்களைச் சேகரித்தனர். அதை வைத்துக்கொண்டு மத்திய உள்துறை, வெளியுறவு துறை மூலமாக குவைத்தில் இருந்த சங்கரலிங்கத்தை இந்தியாவுக்கு நாடுகடத்தினர். கடந்த 30ந் தேதி குவைத்திலிருந்து திருவனந்தபுரம் வந்த சங்கர் தமிழனை அங்கு சென்று திருச்சி போலீசார் கைது செய்தனர்.

இந்த சட்டவிரோதக் கைதுகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறை கொடிகட்டிப் பறப்பதையே காட்டுகிறது. திருமுருகன் காந்தி மற்றும் சங்கர் தமிழனை அபாண்டமாகக் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்