தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

மற்றொரு புறம் அக்கட்சியின்  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வெங்கடேஷ் பாபும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் புரசை பாபுவும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அதே சமயம் அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் டி.ஜி. வெங்கடேஷ்பாபு நியமிக்கப்படுகிறார். வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் புரசை பாபு நியமிக்கப்படுகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜான்தங்கமும், திருவட்டார் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜெயசுதர்ஷனும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அதே சமயம் அதிமுக  அமைப்புச் செயலாளர் பொறுப்பில் ஜாண்தங்கம் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் ஜெயசுதர்ஷன் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.