/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SIREN-ART_22.jpg)
திருநெல்வேலி மாவட்டம் மேலபட்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் (வயது 17) ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இத்தகைய சூழலில் தான் இந்த சிறுவன் நேற்று (04.11.2024) மதியம் அவரது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனையடுத்து அந்த காரை ஓட்டி வந்தவர்களிடம் சிறுவன், ‘இவ்வளவு வேகமாக ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்தவர்கள் சிறுவன் வீட்டிற்குச் சென்று அவரை தாக்கியதுடன் கொடூரமாக வெட்டியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொலை முயற்சி, சாதி ரீதியாகத் திட்டுதல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட சுமார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை முதற்கட்டமாகப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, சிறுவனின் உறவினர்கள் மற்றும் அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் அங்குள்ள பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 17 வயது சிறுவன் கொடூரமாக வெட்டப்பட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் திருநெல்வேலியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)