Relatives  alleging that child lost due nurses' improper treatment

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயந்தி - கார்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில் மனோஜ் என்ற ஆறு மாத கைக்குழந்தைக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று தனியார் கிளினிக் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக குடியாத்தத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மருத்துவமனையில் அனுமதித்ததில் இருந்தே குழந்தைக்கு குளுக்கோஸ் செலுத்த செவிலியர்கள் முறையாக ஊசி செலுத்தாமல் கழுத்து உட்பட பல இடங்களில் ஊசி குத்தியதாகவும், இதனால் உடலில் இருந்து ரத்தம் வழிந்து குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பச்சிளம் குழந்தையின் உடலை கையில் ஏந்தி தாய் கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. முறையான சிகிச்சை அளிக்காத அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இது குறித்து வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனரிடம் விளக்கம் கேட்ட போது, குழந்தை மருத்துவமனைக்கு வரும்போது வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்று இருந்தது. குழந்தைக்கு குளுக்கோஸ் செலுத்த சரியாக நரம்பு தெரியாததால் ஒன்றுக்கு இரண்டு முறை ஊசி குத்தி உள்ளனர். அப்போது பணியில் மயக்க மருந்து நிபுணர் இருந்துள்ளார். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு ஏதேனும் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனாலும் பாதித்திருக்கும். இருந்த போதும் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதனிடையே, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் மருத்துவ இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஆகியோரின் உத்தரவின் பேரில் அணைக்கட்டு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிங்காரவேலன், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டார். சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டு சென்றனர். இதனால் சுமார் 4 மணி நேரம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இது தொடர்பாக குடியாத்தம் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.