A relative of a former ADMK minister who lodged a fraud complaint has died suddenly due to ill health.

அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மோசடிப் புகார் அளித்த அவருடைய உறவினர் உடல்நலக்குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார்.

Advertisment

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் சரோஜா. அதிமுக முன்னாள் அமைச்சர். இவருடைய நெருங்கிய உறவினரும், அவரிடம் முன்பு உதவியாளராகவும் பணியாற்றி வந்தவர் குணசீலன் (68). நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வசித்து வந்தார்.

Advertisment

சரோஜா, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரத்தில் போட்டியிட்டபோது வேட்புமனுவில் குணசீலனின் வீட்டு முகவரியைத்தான் பதிவு செய்திருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது 15 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76.50 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக குணசீலன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் அளித்து இருந்தார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சரோஜா மீதும் அவருடைய கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

அதேநேரம், அவர்கள் நாமக்கல் நீதிமன்றத்திலும் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதையடுத்து சரோஜா தரப்பில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், சரோஜா மீதும், அவருடைய கணவர் மீதும் மோசடி புகார் கூறிய குணசீலனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (ஜன. 26) காலையில் உயிரிழந்தார்.

குணசீலன், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.