
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தனது இரண்டு வயது மகனை பெற்ற தாயே இரக்கமின்றி கொடூரமாக தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலானதையடுத்து அந்தப் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோரை சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பு அடங்குவதற்குள் கடலூரில் இதேபோல் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியைச் சேர்ந்தர் ஹரிகிருஷ்ணன் (45). இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது இரண்டாவது மனைவி சாந்திதேவி (35). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர், காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார். கரோனா காரணமாக தற்போது பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து பாடங்களைப் படித்துவருகிறார்.
இந்த நிலையில், சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரின் மகனும், சித்த வைத்தியருமான சுலைமான் அகமது (40) என்பவர் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள சாந்திதேவி இல்லத்திற்கு வந்துள்ளார். அந்த வீட்டில் பில்லி சூனியம் இருப்பதாகவும், அவற்றை எடுத்துவிடுகிறேன் என்றும் கூறயுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது சாந்தி தேவிக்கும், சுலைமான் அகமதுக்கும் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதனால் சுலைமான் அகமது அடிக்கடி சாந்தி தேவியின் வீட்டிற்கு வந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
கரோனா காலமாக இருந்ததால் சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்ததால் சிறுவன், இவர்களின் உறவுக்கு இடையூறாக இருந்ததாக தெரிகிறது. இதனால் சாந்திதேவி, சுலைமான் முகமது இரண்டு பேரும் சேர்ந்து அச்சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதை அச்சிறுவன், பக்கத்தில் உள்ள வீட்டுக்காரர்களிடம் சொல்லி, “என்னை காவல்துறையிடம், இல்லை வேறு எங்கேயாவது கொண்டு போய் விட்டுவிடுங்கள்” என்று கதறி அழுதுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட சாந்தி தேவி, பெற்ற மகன் என்றும் பாராமல் அச்சிறுவனை அடிக்கடி சூடு வைத்து அடித்து, கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அச்சிறுவன் இதுபற்றி பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சாந்தி தேவியை பார்க்க சுலைமான் முகமது நேற்று (07.09.2021) அவரது வீட்டிற்கு வந்துள்ளார் இதைப் பார்த்த அச்சிறுவன் தனது தாயிடம், “அவர் ஏன் அடிக்கடி நம் வீட்டுக்கு வருகிறார்?” என்று கேட்டு அவர்களின் உறவுக்கு இடையூறாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தி தேவி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்துகொண்டு தனது மகன் என்றும் பாராமல் இரும்பு குழாயை தீயில் பழுக்க வைத்து சூடு வைத்துள்ளார். இதனால் வலி தாங்காமல் துடித்த சிறுவன் தெருவுக்கு ஓடியபோதும் அவனை விடாமல் துரத்தித் துரத்தி சாந்திதேவி கொடூரமாக தாக்கியுள்ளார்.
இந்தத் தகவல் அறிந்த பக்கத்து வீட்டுக்காரர், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீசார் சாந்திதேவி இல்லத்திற்கு விரைந்து சென்று சிறுவனை விசாரணை செய்ததில் உண்மை தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சாந்திதேவி மற்றும் அவருடைய ஆண் நண்பன் சுலைமான் முகமது ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து இருவரையும் கைது செய்தனர்.
சிறுவனின் உடல் முழுவதும் சூடு போட்ட வடு இருந்ததால் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து, பின்னர் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததற்காக தன் மகனையே தாய் உடல் முழுவதும் சூடு வைத்து சித்தரவதை செய்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.