sta

Advertisment

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த திமுகவின் ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுவாயில் கதவில் தமிழக அரசின் அரசாணையும் ஒட்டப்பட்டது.

Advertisment

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி மு.க.ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், திமுக கொண்டு வர கோரிய ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருப்பதால், ஒத்திவைப்பு தீர்மானம் தேவையில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் திமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.