Register a case against Minister Ponmudi High Court orders

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வந்தனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, அமைச்சர் பொன்முடி தன்னுடைய பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘தலைகுனியும் சூழல் ஏற்பட்டுவிட்டது குறித்து வருந்துவதாகவும், மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ எனவும் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (17.04.205) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி, “ஒரு அமைச்சர் இவ்வாறு அவதூறாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisment

அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?. அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் இல்லை. இந்த பேச்சை வேறு எவரேனும் பேசி இருந்தால் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஊழலை எப்படிச் சகித்துக்கொள்ள முடியாதோ அதே போல வெறுப்பு பேச்சையும் சகித்துக்கொள்ள முடியாது. ஏற்கெனவே, எச்.ராஜா, கஸ்தூரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து நீதிபதி இந்த வழக்கை மாலை 4.45 மணிக்கு ஒத்திவைத்திருந்தார். அப்போது இது தொடர்பாகத் தமிழக டிஜிபிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி விளக்கமளிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 5 புகார்கள் வந்துள்ளன. ஏப்ரல் 12ஆம் தேதி அமைச்சர் மீது புகார் மனு பெறப்பட்டுள்ளது. அதற்கு நீதிபதி, “இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மீது ஒரு புகார் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யுங்கள். 4 அல்லது 5 புகார்கள் வந்து அதன்படி வழக்குப்பதிவு செய்தால் அந்த வழக்கு நீர்த்துப் போய்விடும்’ எனத் தெரிவித்தார்.