
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்தவர் கனகராஜ். இவர் நேற்று (22.11.2021) காலை கரூர் - திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியிலிருந்தபோது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வாகனம் ஒன்றை ஆய்வு செய்வதற்காக நிறுத்தியபோது, அந்த வாகனத்தை ஓட்டியவர்கள் அவர் மீது வாகனத்தை மோதிவிட்டு வேகமாகச் சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு அவர் பலியானார். இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், அந்த வண்டியைக் காவல்துறையினர் இன்று பறிமுதல் செய்தனர். ஜவுளி நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனம் அது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோகைமலையை அடுத்த கழுகூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனம் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.