தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் வழங்க மறுத்தால் சட்டரீதியான பிரச்சனையைச் சந்திக்க நேரிடும்! – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Refusal to provide information under the Right to Information Act can lead to legal problems! - High Court warns!

தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்கள் வழங்க மறுத்தால், சட்டரீதியான பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2006, 2007 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் எத்தனை அரசுப் பணியிடங்கள் காலியாக இருந்தன?அதில், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எத்தனை பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தஎத்தனை பேருக்கு அரசுப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? என்பன உள்ளிட்ட விவரங்களை வழங்கவேண்டும் என, திருச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் முத்தையா, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

இந்தத் தகவல்களை, மனுதாரருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழங்கவேண்டும் என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்தத் தகவல்களை வெளியிட்டால், சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனக் கூறி, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டியும், சட்டத்தில் விலக்கு உள்ளதாகக் கூறியும் தகவல்களை வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார் மேலும், இதுபோன்ற தகவல்களை வழங்க மறுக்கும் பொதுத் தகவல் அதிகாரிகள் பதவியில் நீடிக்கத் தகுதி இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரர் கோரிய தகவல்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.

Ad

தகவல்களை வழங்க மறுத்த பொதுத் தகவல் அதிகாரிகள், இன்னும் பதவியில் நீடிக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 14 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். தகவல்களை வழங்க மறுத்தால், சட்டரீதியான பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் என அனைத்துத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

highcourt
இதையும் படியுங்கள்
Subscribe