
தமிழ்நாட்டில் வரும் 3ஆம் தேதிவரை பெட்ரோல் டீசல் வரியைக் குறைக்கக் கோரி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைத்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை பெரிய அளவில் குறைத்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி இதுவரை குறைக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களைப் போல் வரியைக் குறைக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தப்படி குறைக்க வேண்டும். குறிப்பாக, சிலிண்டர் விலையை ஏற்கனவே கூறியபடி 100 ரூபாய் குறைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.