Skip to main content

செம்மண் வழக்கு; அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜர்

Published on 19/03/2025 | Edited on 19/03/2025
Red soil case; Minister Ponmudi appears in person

செம்மண் வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கங்கள் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி அதிக அளவில் செம்மண் வெட்டியதாக புகார் எழுந்தது. இதனால் தமிழக அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம்  அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது. அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டப்பட்டதன் மூலம் கிடைத்த பணம் ஹவாலா முறையில் வெளிநாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் சிகாமணி ஆகியோரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அமைச்சர் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி, அசோக் சிகாமணி ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

தற்பொழுது அமைச்சராக இருப்பதால் அடுத்த விசாரணைகளில் ஆஜராக தனக்கு விலக்கு வேண்டும் என பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பொன்முடியின் மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்ய இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இன்று பொன்முடி ஆஜராகியதைத் தொடர்ந்து பிணைப்பத்திரம் தாக்கல் செய்வதற்காக வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்துள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

சார்ந்த செய்திகள்