Red Alert for two districts Meteorological Department Warning 

Advertisment

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “ நேற்று (01.12.2024) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய ‘ஃபெஞ்சல்’ புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது. மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவானது. இதனையடுத்து இன்று (02.12.2024) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் உருவானது. இது மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை (03.12.2024) காலை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இதனால் இன்று (02.12.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும். எனவே இந்த இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் சமவெளிப்பகுதிகள் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (03.12.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (04.12.2024) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு, “மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஒகேனக்கல், சிறுவாணி மற்றும் இப்பகுதியில் உள்ள மற்ற அணைகள் உள்ள பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.