'Red Alert for Nilgiris' - Meteorological Department Information

Advertisment

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (18.07.2024) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18.07.2024) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.