Recruitment for the post of District Consultant, Social Worker, Data Entry Operator; Salem Collector Information!

சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் கடந்த 2007- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாவட்ட அளவில் இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.

Advertisment

தற்போது காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் ஆள்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மாவட்ட ஆலோசகர் பணியிடத்திற்கு மாத ஊதியம் 35 ஆயிரம் ரூபாய்; , சமூக பணியாளர் பணியிடத்திற்கு மாத ஊதியம் 13 ஆயிரம் ரூபாய்; தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு மாத ஊதியம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

Advertisment

இம்மூன்று பணியிடங்களுக்கும் பொதுவான வயது வரம்பு 1.1.2022 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.மாவட்ட ஆலோசகர் பணிக்கு பொது சுகாதாரம் / சமூக அறிவியல் / நிர்வாகம் / தொடர்புடைய துறையில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பு / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுநிலை பட்டப்படிப்பு / எம்பிபிஎஸ் / பிடிஎஸ் பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சமூக பணியாளர் பணியிடத்திற்கு சமூகவியல் / சமூக பணியாளர் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது சமூகவியல் / சமூக பணியாளர் ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு, இடைநிலை பள்ளிக்கல்வி (எஸ்எஸ்எல்சி அல்லது பிளஸ்2) மற்றும் கணினி அனுபவம் ஆகியவற்றுடன் குறைந்தது ஒரு ஆண்டு தரவு உள்ளீட்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான விவரங்கள் (salem.nic.in/notice_category/recruitment/) என்ற சேலம் மாவட்ட வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படை மற்றும் வெளிப்படையான முறையில் பணியமர்த்தப்பட தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்பணியிடங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 04/01/2022ம் தேதி மாலை 05.00 மணிக்குள் சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.