ADVERTISEMENT

அதிமுக ஆவணங்கள் மீட்பு; ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு

10:37 AM Sep 26, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி காலை கூடியது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அதே சமயத்தில் ஓபிஎஸ் தரப்பினர், பூட்டப்பட்டு இருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். இந்த விவகாரத்தை அறிந்து தலைமை அலுவலகத்தின் வெளியே இபிஎஸ் தரப்பினரும் கூடினர். இதனால் அங்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரிடையே மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தை மயிலாப்பூர் வட்டாட்சியர் பூட்டி சீல் வைத்தார். அதன் பிறகு அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உயர்நீதிமன்றம் வழங்கியது.

சாவியை பெற்ற இபிஎஸ் தரப்பில் இருந்து சி.வி.சண்முகம் உட்பட சில அதிமுகவினர் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதன் பின் தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும் ஆவணங்களையும் ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் ஆய்வில் ஈடுபட்டனர். 20க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சேதமான பொருட்கள் குறித்தும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது காணவில்லை என குறிப்பிடப்பட்ட வெள்ளி வேல் அதிமுக அலுவலகத்தில் இருந்தது என சிபிசிஐடி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஆங்காங்கு சேதம் செய்யப்பட்ட பொருட்களையும் காணாமல் போன ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் தடயவியல் நிபுணர்கள் அளிக்கும் அறிக்கை, சிபிசிஐடி அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை என மூன்றையும் சேர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் அதிமுக கலவரத்தின் போது எடுத்துச் செல்லப்பட 113 ஆவணங்கள் மீட்கப்பட்டது எனவும் அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது எனவும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆவணங்கள் பரிசுப்பொருட்களை திருடிச் சென்றுவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ஒபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT