Skip to main content

பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 7 சிலைகள் மீட்பு; சாமியார் கைது!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Recovery of 7 idols stolen from Perumal Temple;

 

தாரமங்கலம் அருகே, பழமையான பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 7 சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். சிலைகளை திருடியதாகச் சாமியாரை கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ளூரைச் சேர்ந்த குமரவேல் என்பவர் பூசாரியாக உள்ளார். மே 20 ஆம் தேதி அவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு, கோயிலின் வெளிக் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கோயிலுக்கு அவர் சென்று பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலின் உள் பிரகாரத்தில் இருந்த பழமையான பெருமாள் சிலை, பூதேவி சிலை 2, ஸ்ரீதேவி சிலை 2, ஆஞ்சநேயர், குழந்தை கிருஷ்ணர் சிலை ஆகிய ஏழு சிலைகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

 

இவை அனைத்தும் உலோகத்தால் ஆன ஒரு அடிக்கும் குறைவான உயரம் கொண்ட, பழமையான சிலைகள் ஆகும். இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா இனியனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கோயில் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், பெரிய சோரகையைச் சேர்ந்த சக்திவேல் (45) என்பவர், கோயில் பூட்டை உடைத்து சிலைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 7 சிலைகளையும் காவல்துறையினர் மீட்டனர். 

 

விசாரணையில், சக்திவேல் உள்ளூரில் காவி உடை அணிந்து கொண்டு அருள்வாக்கு கூறும் சாமியாராகச் செயல்பட்டு வந்ததும், தனது வீட்டில் பூஜை நடத்தி குறி சொல்ல வசதியாக சாமி சிலைகளைத் திருடி இருப்பதும் தெரியவந்தது. கைதான சக்திவேலை, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிலை திருட்டு நடந்த 5 நாள்களில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி., சிவக்குமார் பாராட்டினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Puri Jagannath temple treasure room opening

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா; டன் கணக்கில் குவிந்த பூக்கள்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Muthumariamman temple flower sprinkling festival Tons of flowers

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று (14.07.2024) பூச்சொரிதல் விழா நடந்தது. கிராமத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள், கிராமத்தினர் மேளதாளங்கள் முழங்க பூ தட்டுகளுடன் ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு வந்து அம்மனுக்கு மலரபிஷேகம் செய்தனர்.

அதே போலச் செண்டை மேளம், டிரம்ஸ் வானவேடிக்கைகளுடன் வாகன உரிமையாளர்கள் வாகனங்களிலும் பூ தட்டுகள் கொண்டு வந்தனர். டன் கணக்கில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மலர் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து இரவு கரகாட்டம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை நாலாஞ்சந்தி கருப்பர் உள்படக் கிராமத்தில் உள்ள கோயில்களில் பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்து வரும் 21ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது. 

Muthumariamman temple flower sprinkling festival Tons of flowers

அதன்படி வரும் 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பொங்கல் திருவிழாவும் 29 ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா நாட்களில் பகலில் அன்னதானமும் இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்து வருகின்றனர். 

The website encountered an unexpected error. Please try again later.