Skip to main content

'சமரசம்; வாபஸ்'- முடிந்தது காவல்துறை போக்குவரத்துத் துறை மோதல்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
'Reconciliation; Withdrawal'-Finished Police Transport Department Clash

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்தக் காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின் போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை உள்படத் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு எதிராகப் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அதன்படி, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர். போக்குவரத்துத்துறை அறிவிப்புக்குப் பிறகு, அரசு பேருந்துகளுக்குத் தமிழக போலீசார் அபராதம் விதிக்க தொடங்கியதால் சர்ச்சையாக மாறியது. மேலும், காவல்துறைக்கும் போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டிருந்தது.

இருதுறைக்கும் ஏற்பட்ட மோதல் போக்கை நிறுத்துவதற்கு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், டிக்கெட் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலரும், நடத்துநரும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், காவலர் ஆறுமுக பாண்டியனும், நடத்துநரும் ஆரத்தழுவினர். இதனையடுத்து அவர்கள் இருவரும், போக்குவரத்துறையும் காவல்துறையும் நண்பர்களாகச் செயல்பட வேண்டும் என்று பேசிக்கொள்கின்றனர்.

இதன் மூலம், இருதுறைக்கும் ஏற்பட்டிருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி அரசு பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் திரும்பப் பெறப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இரு துறைகளுக்கும் இடையே ஏற்பட்ட சமரசத்தை அடுத்து காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்