Receipt books for 15 years; Malarvizhi IAS corruption that has come out

சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ள மலர்விழி ஐ.ஏ.எஸ் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடைபெற்றது.

Advertisment

மலர்விழி கடந்த 2018 - 2020 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அப்போது பஞ்சாயத்துகளுக்கு வாங்கக்கூடிய ரசீது புத்தகங்கள் அச்சடிக்கும் விவகாரத்தில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநில நிதிக்குழு கொடுத்த நிதியில் இருந்து போலியான ஆவணங்களைக் காட்டி ரசீது புத்தகங்களை அச்சடித்து மோசடி செய்ததை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். குறைந்த பட்சம் ரூ. 5000க்கும் அதிகமான பணத்தை தனியாரிடம் கொடுக்கும்போது விதியின் அடிப்படையில் டெண்டர் விடப்பட வேண்டும். ஆனால் ரசீது புத்தகங்களை அச்சடிக்க ஆட்சியர் மலர்விழி அந்த விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 பஞ்சாயத்துகளுக்கு ரசீது புத்தகங்களை அச்சடிக்கும் விவகாரத்தில் ஆட்சியர் மலர்விழி ஊழல் செய்தது தெரியவந்தது.

Advertisment

மேலும் சென்னையைச் சேர்ந்தஇரண்டு நிறுவனங்களுக்கு ரசீது புத்தகங்கள் அச்சடிக்கும் டெண்டரை முறைகேடாக வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. டெண்டர் விதிகளை மீறியும் ரசீது புத்தகங்கள் அச்சடிப்பதற்கான விதிமுறைகளை மீறியும் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மலர்விழி, அரசுக்கு 1 கோடியே 31 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தியுள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த ரசீது புத்தகங்கள் வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட வரி வசூல் செய்வதற்கான புத்தகங்கள் ஆகும்.

பஞ்சாயத்துகளுக்குதேவைப்படும் போது அந்தந்த பஞ்சாயத்துகள் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தின் மூலம் ரசீது புத்தகங்களை அச்சடித்து பெற்றுக்கொள்வார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியர் மலர்விழியோ இன்னும் 15 ஆண்டுகளுக்கு பயன்படும் வகையில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரசீது புத்தகங்கள் வாங்கி இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்தபோது மேலும் ஒரு ஊழல் அம்பலமாகியுள்ளது. ரசீது புத்தகங்களை அச்சடித்த இரு நிறுவனங்கள் 33 பஞ்சாயத்துகளுக்கு ப்ளீச்சிங் பவுடர் சப்ளை செய்த விவகாரத்திலும் ஊழலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பென்னாகரத்தில் கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் மலர்விழி ஆட்சியராக இருந்த போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓவாக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின் மூலம் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 4 மண்டலமாகப் பிரிக்கப்பட்ட 33 பஞ்சாயத்துகளுக்கு ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. ப்ளீச்சிங் பவுடரை சப்ளை செய்த விவகாரத்தில் 4 நிறுவனங்கள் இணைந்து கிருஷ்ணனோடு இணைந்து 30 லட்சம் வரை மோசடி செய்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.