
பொள்ளாச்சி அருகே, வாய்ப் பகுதியில் காயங்களுடன் சுற்றித் திரிந்த காட்டு யானை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்நிலையில் வெடி மருந்து வெடித்து யானை வாயில் ஏற்பட்ட காயமே யானையின் உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த காரமடை பகுதியில் சின்னத்தம்பி என்ற காட்டு யானை சோர்வுடன் காணப்பட்டது. அதன் காரணமாக கும்கி யானை மூலம் பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனிற்றி நேற்று யானை உயிரிழந்தது.
இன்று யானைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் யானையின் தாடைகள், பற்கள் சேதமடைந்து அதன் காரணமாக உணவு எடுத்துக் கொள்ள முடியாததால் யானை பலவீனமாகி உயிரிழந்துள்ளது என்றும் பற்கள் மற்றும் தாடை பகுதிகளில் ஏற்பட்ட சேதத்திற்கு காரணம் வாய்ப் பகுதியில் வெடி மருந்து வெடித்ததே எனத் தெரிய வந்துள்ளது. வேட்டைக்கு வைத்த வெடி மருந்தை தெரியாமல் யானை உட்கொண்டதா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன் கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி மருந்து வைத்து காட்டு யானைக்கு கொடுத்து பின்னர் அந்த யானை இறுதி வரை உணவு எடுத்துக்கொள்ளாமல் ஆற்று நீரில் உயிரிழந்து கிடந்ததும் உடற்கூறாய்வில் யானை கருவுற்று இருந்ததும் வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.