ADVERTISEMENT

“அனைத்து பாதிப்புகளுக்கும் அரசு எந்திரம் செயல்படாததே காரணம்..” - ராமதாஸ் 

01:18 PM Dec 31, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழையின் காரணமாக கடும்போக்குவரத்து நெரிசலும், பாதிப்பும் ஏற்பட்டது. இன்று காலையும் சென்னையின் பல்வேறு பகுதியில் மழை வெள்ளம் வடியாமல் நிற்கிறது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சென்னை மாநகரம் இப்போது மீண்டும் ஒரு பேரிடரை கடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் அனுபவிக்காத அவதிகளையும், துயரங்களையும் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் நேற்று அனுபவித்திருக்கிறார்கள். பல இடங்களில் மக்களின் சிரமங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகள் அனைத்திற்கும் மழை மீது பழி போட்டு அரசு நிர்வாகம் தப்பிக்க முடியாது.

சென்னை மாநகரிலும், புறநகர் பகுதிகளிலும் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் 10 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது. மெரினா கடற்கரையில் அதிகபட்சமாக 24 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகளில் இதே அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த மழையால் சென்னை மாநகர மக்கள் அனுபவித்த கொடுமைகளை வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. மழை பெய்யத் தொடங்கிய மூன்று மணி நேரத்தில் சென்னையின் பெரும்பாலானப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் சென்னையின் பணக்காரப் பகுதிகள் என்றழைக்கப்படும் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்து விட்டது. தாழ்வான பகுதிகளின் வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது.

தொடர்மழை மற்றும் அதனால் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக சென்னை மாநகரில் மாலை 4.00 மணி வாக்கில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் நள்ளிரவைக் கடந்தும் நீடித்தது. சென்னையின் அனைத்து முதன்மைச் சாலைகளையும் கழுகுப் பார்வையிலிருந்து பார்க்கும் போது வாகன நிறுத்தம் போலவே காட்சியளித்தன. ஒரு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க சில இடங்களில் 2 மணி நேரம் ஆனது. நெரிசலில் சிக்கிக் கொண்ட பலர் 10 முதல் 12 கி.மீ தொலைவை நடந்தே கடந்து சென்றனர். மெட்ரோ ரயில் சேவை மட்டும் இல்லாவிட்டால், பலரால் நேற்று வீடுகளுக்கு சென்றிருக்கவே முடியாது. மழையால் நேற்று அனுபவித்த துயரங்களை சென்னை மாநகர மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

சென்னையில் இந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதற்கான அறிகுறி நேற்று காலை கூட தென்படவில்லை. வானிலை ஆய்வு மையமும் இது தொடர்பாக எந்த முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை. மிகப்பெரும் மழையை கணிக்கத் தவறியதில் இருந்தே தோல்வி தொடங்கிவிட்டது. சென்னையில் நேற்று பெய்ததை விட மிகக்கடுமையான மழைகள் பல முறை பெய்துள்ளன. ஆனால், இந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோ, சென்னையின் தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டதோ கிடையாது. ஆனால், இப்போது ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளுக்கும் அரசு எந்திரம் செயல்படாததே காரணமாகும்.

நவம்பர் மாத இறுதியிலும், டிசம்பர் மாதத் தொடக்கத்திலும் சென்னையில் மூன்று முறை கடுமையான மழை பெய்தது. அந்த மூன்று முறையும் மழை நீர் ஓட வழி இல்லாமல் சாலைகளிலும், தெருக்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த 20 நாட்களாக பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில், நேற்று பெய்த மழைநீர் முழுவதும் மழை - வெள்ள வடிகால்கள் மூலம் வெளியேற்றப் பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த மழைகளில் கிடைத்த தண்ணீரே இன்னும் முழுமையாக வடிய வைக்கப்படாமல், வடிகால்களில் தேங்கிக் கிடப்பது தான் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணம் ஆகும்.

சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலுக்கு மழை - வெள்ளம் காரணம் மட்டுமே காரணம் அல்ல. வாகனப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படாதது தான் மிக முக்கிய காரணம் ஆகும். அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை உள்ளிட்டவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட நிலையில், அவற்றை ஒட்டிய உட்புற சாலைகள் காலியாகவே இருந்தன. அவற்றில் எந்தெந்த சாலைகள் பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்றவை என்பதை அந்தந்த பகுதிகளில் உள்ள போக்குவரத்துக் காவலர்கள் அடையாளம் கண்டு, அந்த சாலைகளில் சிறிய வகை வாகனங்களை திருப்பி விட்டிருந்தால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. போக்குவரத்து நெரிசலால் திணறிய பல சாலைகளில் போக்குவரத்துக் காவலர்களையே காண முடியவில்லை. உலகின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னையில் இது போன்ற நிலை இனியும் ஏற்படக் கூடாது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை - வெள்ள நீர் வடிகால்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. இன்னும் பல இடங்களில் மழை - வெள்ளநீர் வடிகால்களை ஒட்டிய பகுதிகளில் வளர்ந்துள்ள பெரிய அளவிலான மரங்கள் கடந்த பல ஆண்டுகளாக வேர்களை பரப்பியதால் வடிகால்கள் முழுமையாக அடைபட்டுள்ளன. இந்த பகுதிகளில் மழை - வெள்ள நீர் வடிகால்கள் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். இதை செய்யாத வரை சென்னையில் மழை நீர் தேங்குவதை எவராலும் தடுக்க முடியாது.

கடந்த காலங்களில் சென்னையில் தொடர்மழை பெய்யும் போது ஒரு முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் சென்னையில் நான்கு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது விரும்பத்தக்கது அல்ல. இனி இப்படி ஒரு நிலை ஏற்படாத வகையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கான நிரந்தரத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT