Real estate person passes away in trichy police investigation

Advertisment

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து சங்கர் சோலையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்துவருகிறார். இவர், மல்லியம்பத்து பஞ்சாயத்துத் தலைவர் புவனேஸ்வரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்நிலையில், நேற்று (28.11.2021) மாலை 6 மணியளவில் சிவக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டிற்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்து கண்ணிமைக்கும் வேளையில் அவர்கள் கொண்டுவந்த சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் நிலைகுலைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் கொலை தொடர்பாக அவரது மனைவி மைதிலி, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘என் கணவர் சிவக்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். கடந்த வாரம் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன், ராஜீவ் காந்தி நகரில் உள்ள செங்கல் சூளை மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் மூலம் அகற்றினார். அதற்கு என் கணவரும் உடந்தை என எங்கள் ஊரைச் சேர்ந்த பழனியாண்டி மகன் கதிர்வேல், பிரபல தொழிலதிபர் நாகராஜ் மகன் பிரபாகரன் என்கிற மருதராஜ் மற்றும் அங்கமுத்து மகன் தீபக் ஆகியோர் ஊரில் பிரச்சனை செய்துகொண்டிருந்தனர்.

Advertisment

அந்த விரோதம் காரணமாக நேற்று மாலை பிரபாகரன் மற்றும் தீபக் ஆகிய இருவரும் எங்கள் வீட்டு முன்பு நின்று என் கணவரை வரவழைத்து கட்டையால் தலை, காது, பின்னந்தலை ஆகிய இடங்களில் தாக்கினர். தடுக்கச் சென்ற என்னிடம், ‘அடுத்து விக்னேஸ்வரன்தான்’ எனச் சொல்லிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். என் கணவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பார்த்தபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே என் கணவரை கொலை செய்த பிரபாகரன் தீபக் மற்றும் கொலைக்குக் காரணமான கதிர்வேல் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டை ஒட்டியுள்ள இடத்தைப் பெறுவது தொடர்பாக சிவகுமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது தெரியவந்தது. மேலும், மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இந்தக் கொலையில் தொடர்புடைய அந்தநல்லூர் கதிர்வேல் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். சிவகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.