/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_238.jpg)
எம்.ஜி.ஆரால் கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக கட்சி தொடங்கப்பட்டது. கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல் எனத் தொடர்ந்து மூன்று தேர்தல்களிலும் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. அவரது மறைவிற்கு ஜெயலலிதா, ஜானகி என இரண்டாகப் பிரிந்த நிலையில் பின்னாளில் கட்சி முழுவதும் ஜெயலலிதா தலைமையின் கீழ் வந்தது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இரண்டாக அதிமுக பிரிந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக ஆட்சி வந்துள்ளது. அதேசமயம், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி தினகரன் அமமுக, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் என வெவ்வேறு அணிகளாக உள்ளன.
இந்த நிலையில் அதிமுக 52 ஆண்டுகளைக் கடந்து 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது தொடர்பாக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் முதல்வர்கள், கட்சி தொண்டர்கள் எனப் பலரையும் குறிப்பிட்டு கட்சியின் நீண்ட பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஆளும் திமுக கட்சி குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.
இறுதியாக அந்த அறிக்கையில், இன்னும் 1% ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச் செய்வதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் அதிமுகவின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்களின் உயர்வுக்காகவும், கட்சியின் வெற்றிக்காகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன். விடியும் வேளை வரப்போகிறது தருமம் தீர்ப்பை தரப்போகுது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)