“கமல்ஹாசன் சொன்னது அரசியல் கூற்று அல்ல..” - ரவிகுமார் எம்.பி.

Ravikumar supports Kamalhaasan comments on Kannada language

கமல் மற்று மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா கமல் தரப்பிற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், 'கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழியில் ஆய்வாளரா? கன்னட மொழி குறித்துப் பேசி கமல்ஹாசன் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளார். கமல்ஹாசனின் மொழி குறித்து இந்த பேச்சு கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது.

எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழியில் இருந்து பிறந்தது இல்லை. ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன? கமல்ஹாசன் தன்னுடைய பேச்சால் கன்னடம் பேசும் மக்களின் மொழி உணர்வை சிறுமைப்படுத்திவிட்டு தற்பொழுது வணிக நோக்கத்திற்காக நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். மன்னிப்பு கேட்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்?' என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதேபோல் கமல் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 'சூழலை சுமூகமாக்கவே விரும்புகிறோம். நிலைமை கைமீறி விட்டது. தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பது என்பது மக்களின் சினிமா பார்க்கும் உரிமையை மீறும் செயல்' என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வழக்கானது பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'கமல் கர்நாடக திரைத்துறை சம்மேளன தலைவருக்கு 30/05/2025 அன்று எழுதிய கடிதத்தை நீதிபதி முன் படித்து காட்டினார். அதில் என்னுடய (கமல்) பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என்பதை படித்து காட்டிய நிலையில் நீதிபதி குறுக்கிட்டு 'ஒரு மன்னிப்பு கேட்க ஈகோ இவ்வளவு தடுகிறதா?' என கேள்வி எழுப்பினார். 'கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது. திரைப்பட சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒருவாரம் அவகாசம் வேண்டும்' என கமல் தரப்பு கோரிக்கை வைத்த நிலையில் வழக்கு 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள விசிக எம்.பி. ரவிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில், “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்று பலவாகிடினும் ஆரியம் போல் உலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!” என்பது தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடல். தமிழ்த்தாய் வாழ்த்தை நமக்குத் தந்த தமிழறிஞர் சுந்தரனாரின் கருத்தைத்தான் கமல்ஹாசன் கூறியுள்ளார். அதுவொரு அரசியல் கூற்று அல்ல, மொழி நுலாரின் முடிபு.

“கர்நாடகம் என்பது வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்பர் வடமொழிப் புலவர். ஆயினும் டாக்டர் குண்டெர்ட் கூறுவதுபோல் கரு+நாடு + அகம் என்ற தமிழ்ச் சொற்களின் அடியாகப் பிறந்தது அச்சொல் என்று கொள்வதே சிறப்பாகும்” என கால்டுவெல் ஒப்பிலக்கணம் கூறுகிறது.

அனைத்துவிதமான வெறுப்பு அரசியலுக்கும் ஊற்றுக் கண்ணாகத் திகழும் பிற்போக்குவாதிகள்தாம் இந்தப் பிரச்சனையிலும் பின்புலமாக உள்ளனர். அவர்களது சூழ்ச்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகள் பலியாகிவிடக்கூடாது. இதில் விழிப்போடிருந்து திராவிட ஒற்றுமையைக் காக்க வேண்டுமெனகர்நாடக முதலமைச்சரை பணிவோடு வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

kamalhaasan ravikumar vck
இதையும் படியுங்கள்
Subscribe