/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH COURT 2_13.jpg)
கள்ளச்சந்தையில் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 32 ஆயிரத்து 722 ரேசன் கடைகள் மூலம், அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு, ஒரு கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு,கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இதுபோல்,குடும்ப அட்டைதாரர்களுக்கு, மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கும் வகையில், மாதம்தோறும் 35 ஆயிரத்து 133 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோதுமையைப் பொருத்தவரை, 34 ஆயிரத்து 890 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவுதல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து தரப்பு மக்களும் வேலைவாய்ப்பினை இழந்து, வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது. ஆனால், பயனாளர்களுக்கு இது முழுமையாக சென்றடையவில்லை. குறிப்பாக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்,முழுமையான அளவில் வழங்கப்படாமல், கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளன.
இதைத் தடுக்கஅனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க உத்தரவிடக்கோரி, சிரில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Follow Us