Advertisment

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்காணல்; போட்டிப்போட்டு குவிந்த இளைஞர்கள்!

Ration Shop Clerk Job Interview salem

சேலத்தில், ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணிக்கு போட்டிப்போட்டு இளைஞர்கள் ஆர்வத்துடன் நேர்காணலுக்குவந்திருந்தனர்.

Advertisment

தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் 5578 விற்பனையாளர், 925 கட்டுநர் காலிப்பணியிடங்கள் அந்தந்தமாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 236 விற்பனையாளர், 40 கட்டுநர் என மொத்தம் 276 பணியிடங்கள் காலியாக உள்ளன. விற்பனையாளர் பணிக்கு பிளஸ்2 தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சியும் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பணி நாடுநர்களிடம் இருந்து கடந்த நவ. 14ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 22 ஆயிரம் பேர் போட்டிப்போட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

Advertisment

இந்தப் பணியிடங்கள் அனைத்தும் நேரடித்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதையடுத்து, பணிநாடுநர்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ்சரிபார்ப்புப் பணிகள் சேலம் அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் வியாழக்கிழமை (டிச. 15) தொடங்கியது. முதற்கட்டமாகவிற்பனையாளர் காலியிடத்திற்கான நேர்காணல் நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில்ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு வரலாறு காணாத வகையில் விண்ணப்பங்கள் குவிந்ததை அடுத்து, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் கிட்டத்தட்ட 'வேலைவாய்ப்புத் திருவிழா' போல காட்சி அளித்தது.

பள்ளிக்கல்விதான் அடிப்படைக் கல்வித்தகுதி என்றாலும் கூட பி.இ., எம்.இ., எம்.பி.ஏ., மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஏராளமானஇளைஞர்களும், இளம்பெண்களும் வேலை தேடி ஆர்வத்துடன் நேர்காணலுக்கு வந்திருந்தனர். தள்ளுமுள்ளு உள்ளிட்ட நெருக்கடிகள்ஏற்பட்டு விடாமல் இருக்க, சேலம் மண்டலக் கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் தலைமையில் துணைப்பதிவாளர்கள், சார்பதிவாளர்கள்,முதுநிலை ஆய்வாளர்கள், கடன் சங்கச் செயலாளர்கள் உள்ளிட்ட கூட்டுறவுத் துறையின் ஒட்டுமொத்த ஊழியர்களும் விரிவானமுன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Ration Shop Clerk Job Interview salem

நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேருக்கு நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. டிச. 29ம் தேதி வரை இப்பணிகள் நடக்கின்றன. காலை 9மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடத்தப்படுகின்றன. அழைப்புக் கடிதத்துடன் வரும் பணிநாடுநர்களை வரிசைப்படுத்தும் துறை ஊழியர்கள், அவர்களிடம் இருந்து செல்போனை பெற்றுபாதுகாப்பான இடத்தில் வைக்கின்றனர். அதற்காக ஒவ்வொருவருக்கும் டோக்கன் தரப்படுகிறது. நேர்காணல் முடிந்து செல்லும்போது டோக்கனை ஒப்படைத்து அவரவர்க்குரிய செல்போனை பெற்றுச் செல்லலாம். அதன்பிறகு, அழைப்புக் கடிதத்திலேயே நேர்காணல் நடைபெறும் அரங்கத்தின் எண்ணும் குறிப்பிடப்பட்டு உள்ளதால், அதற்கேற்ப அவர்களை வரிசையில் அமர வைக்கின்றனர். நேர்காணலுக்குச் செல்வதற்கு முன்பாக அவர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. பணிநாடுநர்கள் தங்களின் ஐயத்தைக் களைந்து கொள்ள உதவி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.

சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு 18 இருக்கைகளும், நேர்காணலுக்கு 35 அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பெரும்பாலும் சார்பதிவாளர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் 3 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

மாற்றுத்திறனாளிகளை அழைத்து வர சக்கர நாற்காலிகள் வசதியும் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கு முன்னுரிமை அளித்து, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் நடத்தி முடிக்கப்படுகிறது. அதன்பிறகே மற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுகின்றனர். நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளில் ஈடுபடும் துறை சார்ந்த ஊழியர்களும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.

Ration Shop Clerk Job Interview salem

சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாரதா கல்லூரி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் முகப்பில் நேர்காணல் நடைபெறும் கூட்டுறவு மண்டபத்திற்குச் செல்லும் இடத்தைக் குறிப்பிட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு இருந்தது கவனம் ஈர்த்தது. நடமாடும் கழிவறை வாகனம், '108' ஆம்புலன்ஸ் வாகனமும் நுழைவுவாயில் அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இப்பணியில் கூட்டுறவுத்துறையைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கான உணவு, தேநீர், காபி, கார வகைகள் தயார் செய்து அங்கேயே வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கூட்டுறவு மண்டபத்திற்கு வெளியே நடமாடும் தேநீர் கடைகள், கலவை சாத விற்பனை என திடீர் கடைகள் உருவாகிஇருந்தன. குறைவானஊதியமே கிடைக்கும் ரேஷன் கடை வேலைக்காக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் கூட்டுறவு மண்டபத்திற்கு உள்ளே காத்திருந்தனர்.அதேநேரம் மண்டபத்திற்கு வெளியே, நடமாடும் தேநீர், போண்டா, வடை, கலவை சாதம் விற்பனை என சுயதொழில் வியாபாரிகளின் வியாபாரம் களைகட்டியதைக் காணமுடிந்தது.

இது தொடர்பாக சேலம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் கூறுகையில், ''ரேஷன் கடைகளில் காலியாக உள்ளவிற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. முற்றிலும் 'மெரிட்' அடிப்படையில் இப்பணியிடங்கள்நிரப்பப்படும். நேர்காணலுக்கு வரும் பணிநாடுநர்களுக்கு எந்தவித அசவுகரியம் கூட ஏற்பட்டு விடாதபடி, கடந்த பத்து நாட்களாக விரிவானஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்'' என்றார்.

Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe