Skip to main content

கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பனா? பெரியகண்ணனா? இண்டர்வியூ அலப்பறைகள்..

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

ration shop clerk job interview atrocity

 

சேலம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 236 விற்பனையாளர், 40 கட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் அழகாபுரம் கூட்டுறவு மண்டபத்தில் வியாழக்கிழமை (டிச. 15) தொடங்கியது.  

 

விற்பனையாளர் பணிக்கு பிளஸ்2 தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், இரட்டைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.இ., எம்.இ., எம்.பி.ஏ., உள்ளிட்ட தொழிற்படிப்பு முடித்தவர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு இந்தப் பணியில் சேர்வதற்காக விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 276 காலியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

 

விற்பனையாளர் பணியில் சேருவோருக்கு முதலில் ஓராண்டுக்கு மாதம் 6200 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். பணி வரன்முறைப்படுத்தப்பட்ட பிறகு காலமுறை ஊதியம் சுமார் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஓய்வுக்கால பலன்கள் கிடையாது. குறைவான ஊதியம் ஒருபுறம் இருக்க, பள்ளிக் கல்வித்தகுதிக்கான ஒரு வேலைக்கு இரட்டைப் பட்டங்கள் பெற்ற, தொழிற்படிப்பு முடித்த பலரும் போட்டிப்போட்டு நேர்காணலுக்கு குவிந்து இருந்தது பலரையும் வியக்க வைத்ததோடு, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதையும் சொல்லாமல் சொல்லியது. அதேநேரம், அரசாங்க வேலை மீதான மோகமும் பலரின் பேச்சில் வெளிப்பட்டது.  

 

நேர்காணல் நடத்த மொத்தம் 35 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. சார்பதிவாளர் அந்தஸ்திலான அலுவலர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துகின்றனர். பெரும்பாலும் ஒரே மாதிரியான வினாக்களே கேட்கப்பட்டன என்றாலும், ஓரிரு அலுவலர்கள் தங்கள் புலமையை வெளிப்படுத்திக் கொள்ள தாறுமாறான கேள்விகளையும் கேட்டு திணறடித்துள்ளனர்.

 

நேர்காணல் அனுபவங்கள் குறித்து சில இளைஞர்களிடம் விசாரித்தோம்:

 

ration shop clerk job interview atrocity
பிரதீப்

 

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பிசிஏ பட்டதாரி பிரதீப் (25) கூறுகையில், ''மத்திய நிதி அமைச்சர், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் யார்? தற்போது தமிழகத்தில் புதிதாக அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டவர் பெயர்? சேலத்தின் சிறப்புகள் என்னென்ன? ரேஷன் கடைக்கு சென்ற அனுபவம் உண்டா? ஆகிய கேள்விகளைக் கேட்டனர். திடீரென்று கூட்டுறவுத்துறை அமைச்சர் யார்? என்று கேட்டுவிட்டனர். முன்பு ஐ.பெரியசாமி என்பவர் இந்தத் துறை அமைச்சராக இருந்தார். அவரிடம் இருந்த துறை தற்போது வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நேர்காணலின்போது அவருடைய பெயர் மறந்துவிட்டதால் 'பெரியகண்ணன்' என்று சொல்லிவிட்டேன்'' என்றவர் நம்மிடம் பேசும்போது கூட அமைச்சர் பெரியகருப்பன் என்பதற்கு பதிலாக பெரியகண்ணன் என்றே கூறினார்.  'காவலன்' படத்தில் நடிகர் வடிவேல் காமெடியில் வருவதுபோல, கண்ணதாசனா? ஜேசுதாஸா? பாவம்... அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு என்ற காமெடி போல பெரியகருப்பனா? பெரியகண்ணனா? என்பதில் இளைஞர் ரொம்பவே குழம்பிப் போயிருந்தார்.  

 

ration shop clerk job interview atrocity
பிரகாஷ்

 

சேலம் பொன்னம்மாபேட்டை தம்பிகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பி.காம். பட்டதாரி பிரகாஷ் (21) கூறுகையில், ''என்னிடமும் கூட்டுறவுத்துறை அமைச்சர், சேலத்தின் சிறப்புகள் குறித்த கேள்விகள்தான் கேட்டார்கள்.  அதன்பிறகு, ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிய அனுபவம் உண்டா? என்றனர். ரேஷனில் எந்தெந்த பொருள்கள் பணம் கொடுக்காமல் கிடைக்கும்? என்றும் கேட்டனர்'' என்றார்.  

 

ration shop clerk job interview atrocity
அசோக்

 

ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டியைச் சேர்ந்த பி.இ. (மெக்கானிக்கல்) பட்டதாரி அசோக்கிடம் (24) பேசினோம்.  ''அரைக்காசுனாலும் அரசாங்க உத்தியோகமாக இருக்கணும்; கால்காசுனாலும் கவர்ன்மென்ட் வேலையா இருக்கணும்னு ஊர்ப்பக்கம் சொல்லுவாங்க. அதனாலதான் இந்த வேலையில் சேர விண்ணப்பித்தேன். எங்க அப்பாதான் இந்த வேலைக்கான விண்ணப்பத்தை வாங்கி வந்தார். ஆரம்பத்தில் அவர்தான் பி.இ. படித்துவிட்டு ரேஷன் கடை வேலைக்குப் போகலாமா? என ஆட்சேபனை தெரிவித்தார். பின்னர் அவரே அரசாங்க வேலை என்று சொல்லி இண்டர்வியூக்கு அனுப்பி வைத்துவிட்டார். 

 

நேர்காணலின்போது ஆரம்பத்தில் என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொண்டனர். பி.இ. மெக்கானிக்கல் முடித்துவிட்டு சேலம் இரும்பாலையில் 3 ஆண்டுகள் ஒப்பந்தப்பணியாளராக வேலை செய்திருந்ததால் அது தொடர்பான கேள்விகளைக் கேட்டனர். சேலத்து இரும்பில் இருந்து எந்த நாட்டில் பாலம் கட்டினார்கள்? என்று கேட்டனர். அதற்கான பதில் தெரியாததால், வெளிப்படையாகத் 'தெரியாது' என்று சொல்லிவிட்டேன்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெயர் கேட்டனர். இதற்கு முன்பு இருந்த அமைச்சரா? இப்போதைய அமைச்சர் பெயரா? எனத் தெரியாததால் அவர்களிடமே அதைக் கேட்டுக்கொண்டு, பிறகு பதில் அளித்தேன்'' என்றார் அசோக்.  

 

ration shop clerk job interview atrocity
பொன் எழிலன்

 

கொங்கணாபுரத்தைச் சேர்ந்த டி.எம்.இ. படித்த பொன் எழிலனிடம் (29) ரேஷன் கடைகள் குறித்து கொஞ்சம் ஆழமாகவே கேள்விகளைக் கேட்டு துளைத்திருக்கிறார்கள் அலுவலர்கள்.  அவர் நம்மிடம், ''நான் டிஎம்இ படித்து இருந்ததால் முதலில் நான் படித்த படிப்பைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தனர். அதையடுத்து, ரேஷன் கடைக்குச் சென்று வந்த அனுபவம் பற்றி கேட்டனர். ரேஷன் கார்டுகளில் என்னென்ன வகைகள் இருக்கின்றன? என்று கேட்டனர்.  ரேஷன் கடை விற்பனையாளரின் கடமைகள்? ரேஷன் கடைகளில் இப்போது பொருட்கள் வழங்கும் நடைமுறைகள் குறித்து கேள்விகளைக் கேட்டனர்'' எனக்கூறிய பொன் எழிலனிடம், எதனால் இந்த வேலைக்கு வர ஆசைப்படுகிறீர்கள் என்றோம்.  

அதற்கு அவரோ, ''சார்... ஓப்பனாக சொல்லணும்னா... வீட்ல திருமண ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. அரசாங்க வேலை என்றால்தான் பெண் தருகிறார்கள். அதனால்தான் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமே என்று வந்தேன். எங்க தாய்மாமாவே எனக்கு அரசாங்க வேலை இல்லை என்பதால் பெண் தர மறுத்துவிட்டார்'' எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.  

 

இவர் நிலைமை இப்படி என்றால், புதுரோடு பகுதியைச் சேர்ந்த பி.காம் (சிஏ) பட்டதாரியான நவீன்குமார் (22) என்பவரிடம் நேர்காணல் நடத்திய குழுவில் இருந்த அலுவலர் ஒருவர் கணினி சார்ந்த கேள்விகளைக் கேட்டு திணறடித்து இருக்கிறார்.  ''ரேஷன் கடை, கூட்டுறவுத்துறை தொடர்பாக என்னிடம் கேள்விகள் கேட்காமல், பெரும்பாலும் கம்ப்யூட்டர் சார்ந்த கேள்விகளையே கேட்டனர். கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் 'ரோம்' என்றால் என்ன? சிம் என்ற சொல்லின் முழு விரிவாக்கம் குறித்துக் கேட்டனர்.  

கப்பல் கட்டும் தளம் எங்கு இருக்கிறது? என்று கேட்டு என்னை திணற வைத்துவிட்டனர். தேசியக்கொடியில் உள்ள நிறங்கள் பற்றி கேட்டனர். ஆரஞ்ச், வெள்ளை, பச்சை என்று பதில் அளித்தேன். ஆரஞ்ச் என்பதற்கு தமிழில் என்ன நிறம்? என்று திரும்பவும் கேட்டனர். அதற்கு எனக்குப் பதில் தெரியாததால் ஆரஞ்ச் என்றால் ஆரஞ்ச் நிறம்தானே? என்ற சொன்னேன். ஒருவேளை காவி நிறம் என்று சொல்லி இருந்தால் சரியாக இருந்திருக்குமோ என்னவோ,'' என்றார் அப்பாவியாக.  

 

நேர்காணலின்போது இளம்பெண் ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பொளந்து கட்டியதைப் பார்த்த அலுவலர்கள், நீங்கள் வேறு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாமே என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். டிச. 29ம் தேதி வரை நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு நாளும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்