Skip to main content

ரேஷன் அரிசி கடத்திய லாரி விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தது

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
Ration Rice


சென்னை - பெங்களூர் தேசிய நாற்கர சாலையில் ஒரு லாரி சரக்குகளுடன் கர்நாடகா மாநிலம் நோக்கி ஜீன் 19 ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு அருகே இரவு 9 மணிக்குச் செல்லும்போது, முன்னே சென்றுக்கொண்டு இருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தானது.

 

இந்த விபத்து நடந்த அடுத்த சில நொடிகளில் லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது, அதோடு இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்தது. இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

இந்தத் தகவல் ஆம்பூர் காவல் நிலையத்திற்கும் ஆம்பூர் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைக்க போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. அரை மணி நேரத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது.

 

அந்த லாரியில் இருந்தது அனைத்தும் தமிழக நியாயவிலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா அரிசி இருந்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு சென்ற லாரிதான் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.