Advertisment

ரேஷன் அரிசியை மாவாக்கி உணவகங்களுக்கு விற்பனை! 2 பேர் அதிரடி கைது! 

Ration rice for sale 2 arrested

சேலத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், இருவரை கைது செய்தனர். அவர்கள், ரேஷன் அரிசியை மாவாக்கி, உணவகங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

சேலம் பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அம்மாபேட்டை காவல்நிலைய காவல்துறையினர் வியாழக்கிழமை (ஏப். 7) அதிகாலையில் பொன்னம்மாபேட்டை பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பொன்னம்மாபேட்டை தண்ணீர் தொட்டி பகுதியில் ஒரு வீட்டு முன்பு மினி லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

Advertisment

சந்தேகத்தின் பேரில் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு 50 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பிரவீன்குமார் (33), நெத்திமேட்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (35) என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து அரிசியை கிலோ 5 ரூபாய்க்கு வாங்கும் அவர்கள், அதை மாவாக அரைத்து, உணவகங்கள், அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. நீண்ட காலமாக இதை அவர்கள் குடிசைத் தொழில் போல செய்து வந்துள்ளனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள அரிசியை, நெத்திமேட்டில் உள்ள ஒரு மில்லில் மாவாக அரைக்கக் கொண்டு செல்ல இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe