
அரிசி கடத்தலில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மீண்டும் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில், கூட்டுறவுத்துறை மூலம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெரும்பான்மையான கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவதில்லை. அவ்வாறு கார்டுதாரர்கள் அரிசி வாங்காததால் இருப்பில் இருக்கும் அரிசியை அந்தந்த கடை ஊழியர்களே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் குற்றங்கள் பரவலாக அதிகரித்து உள்ளன.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூட்டுறவுத்துறை பதிவாளர் எச்சரித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து இணைப்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்கள், உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பணியாளர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பலமுறை அறிவுரைகள் கூறப்பட்ட பிறகும், மீண்டும் சில கடை ஊழியர்கள் அரிசி கடத்தல் குற்றத்தில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இதை தவிர்க்க, அரிசி கடத்தப்பட்டதாக தகவல் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அரிசி கடத்தல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு செய்ய வேண்டும்.
அரிசி கடத்தலில் ஊழியர்கள் ஈடுபட்டது உறுதியாக தெரிந்தால், அவர்கள் உடனடியாக தற்காலிக பணிநீக்கமும், துறை ரீதியான விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை நிரந்தர பணிநீக்கமும் செய்ய வேண்டும். இணை பதிவாளர்கள், அந்தந்த மண்டலத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் இதுபற்றி அறிவுறுத்தி, உரிய ஆலோசனைகள் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.