/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_531.jpg)
ரேசனில் இரண்டு மாதத்திற்கான துவரம் பருப்பு பாமாயில் அனைவருக்கும் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக ஆட்சியில் 2017 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் (எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிப்ரவரி மாதத்தில்) துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முற்றிலுமாக விநியோகிக்கப்படவில்லை. மே மற்றும் ஜூன் மாதங்களில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, கொள்முதல் செய்து அவர்கள் ஆட்சியில் போல் இல்லாமல் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எல்லோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, கடந்த மாதம் 18ஆம் தேதி விரிவாக அறிக்கை வெளியிட்டு மே மாதம் பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் ஜூன் மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தேன். அதன்படி மே மாதத்திற்கான துவரம் பரும்பு மற்றும் பாமாயில் முற்றிலும் நகர்வு செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டன.
கடந்த 27ஆம் தேதி உணவுத்துறை மானியக் கோரிக்கையின் போதும் இதுபற்றி குறிப்பிட்டு ஜூன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ளாதவர்கள் ஜூலை மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தேன். அதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு துவரம் பருப்பும் பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத்தெரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே திமுக அரசு மீது வீண்பழி சுமத்தி எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் தன் ஆட்சிக் காலத்தில் இரண்டு மாதங்கள் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் யாருக்கும் வழங்காமல் இருந்ததை எண்ணிப் பார்க்காமல் அனைவருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கி வரும் திமுக ஆட்சியைப் பற்றிக் குறை கூறுவது அழகா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)