Skip to main content

கேண்டீன் தின்பண்டங்களில் எலி; மருத்துவமனை முதல்வர் அதிரடி உத்தரவு

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Rat in canteen snacks at stanley Hospital

 

சென்னை ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், இந்த மருத்துவமனையில், தனியார் சார்பில் கேண்டீன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கேண்டீனில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (12-11-23) கேண்டீனில் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை எலி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இது தொடர்பான சம்பவத்தை தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனையடுத்து, அவர்கள் இது தொடர்பாக கேண்டீன் நடத்தும் நபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு உரிய பதில் அளிக்காமல் எலியை விரட்டி விட்டு பஜ்ஜி, போண்டா போன்றவற்றை எடுத்து அகற்றியதாக கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து, இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதற்கு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் கேண்டீனை ஆய்வு செய்து கேண்டீனை தற்காலிமாக மூட உத்தரவிட்டார். இந்நிலையில், கேண்டீனில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை எலி சாப்பிடுவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை இது தொடர்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ‘அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்ட கேண்டீன்களை உடனே ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. மேலும் அதில், ‘சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்த உணவகத்தை இழுத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். உணவுகள் தரமற்ற முறையில் நோயாளிகளுக்கு விநியோகம் செய்தால் கேண்டீனின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்