Advertisment

அரியவகை இசைப்பாணர் சதிக்கல் கண்டுபிடிப்பு!

rare musical discovery

Advertisment

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் அமைச்சியார் அம்மன் கோயில் இடதுபுறம் மதில்சுவரின் ஓரமாக சுமார் 550 ஆண்டுகள் பழமையான ஒரு சதிக்கல் சிற்பம் இருப்பதை, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டி, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, “போர், பிற காரணங்களுக்காக இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் எடுக்கும் வழக்கம் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அவ்வாறு கணவன் இறந்தபின் அவனுடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு சதிக்கல் எடுத்து மக்கள் வணங்கி இருக்கிறார்கள்.

சதிக்கல்லில் கணவன் மனைவி இருப்பது போன்றோ, தனியாக பெண் மட்டும் இருப்பது போன்றோ சிற்பம் அமைப்பர். பெண் கையை உயர்த்தியவாறு, வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவளாகக் காட்டப்படுவாள். இவற்றை தீப்பாஞ்சம்மன், மாலையீடு, மாலையடி எனவும் அழைப்பர்.

Advertisment

rare musical discovery

இங்கு கண்டறியப்பட்டுள்ள சதிக்கல் 2½ அடி உயரம் 3 அடி அகலத்துடன் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆண் முழவு (மிருதங்கம்) என்ற இசைக் கருவியை இசைப்பது போன்றும், அவருடைய மனைவி இரு கைகளை உயர்த்தியவாறும் உள்ளனர். இருவரின் காதுகளும் நீண்டு தொங்குகின்றன. இருவரும் ஆடை அலங்காரங்களுடன், இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளனர். பெண்ணின் கால் அருகில் யாழ் இசைக்கருவி போன்ற ஒரு அமைப்பு உள்ளது. சிற்பத்தின் மேற்பகுதியில், இரு நாசிக்கூடுகளுடன் கபோதம் உள்ளது.

சங்ககாலத்தில் இசை மீட்டுபவர்கள் பாணர், பாடினி என அழைக்கப்பட்டனர். பாடினியர் கூத்துக் கலையிலும், யாழ் எனும் இசைக்கருவியை மீட்டுவதிலும் வல்லவர்களாக இருந்துள்ளனர். இச்சிற்பத்தில் உள்ள ஆணும், பெண்ணும் பாணர், பாடினி போல வடிவமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கோயிலில் இசை மீட்டி, பாடல் பாடி, நடனமாடும் இசைப்பாணர்களாக இருக்கலாம். ஆண்டாள் கோயில் திருவிழாக்களுக்காக 45 மேளகாரர்களை 50ஆக உயர்த்தி ஆணையிட்டதையும், பாணர்களுக்கு பாணங்குளம் என்ற ஊரில் நிலதானம் வழங்கியதையும் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தேர்த்திருவிழாவுக்காக அலங்கார துணிகள் தைக்கும் வேலையையும் செய்து வந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் தையல்காரர் என்ற சமூகம் உள்ளனர். மேலும் மடவார்வளாகம் சிவன் கோயிலில் தையல்பாகம் பிள்ளை கட்டளை என்ற அறக்கட்டளை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிற்பம் பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறுகையில், சிற்பத்தில் உள்ள இசைக்கருவிகளைக் கொண்டு, இது ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களில் இசைப்பணி செய்த பாணர்களின் சதிக்கல் என்பதை அறிய முடிகிறது. பாணர்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததை இது நிறுவுகிறது. இது ஒரு அரியவகை பாணன், பாடினி சதிக்கல் ஆகும். சிற்பத்தில் உள்ள இருவரும் இசை வல்லுநர்களாகவும், திருக்கோயில் இசை கலைஞர்களாகவும் இருக்கலாம். இதன் சிற்ப அமைப்பைக் கொண்டு இது கி.பி.15-ம் நூற்றாண்டு வாணாதிராயர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம். அரியவகை சதிக்கல்லான இதை அரசு பாதுகாக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

discovery Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe