ADVERTISEMENT

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம்; போராடி மீட்ட கடலோர காவல்படை

12:22 PM Jun 02, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் இந்திய கடலோர காவல் படையினருக்கு கடந்த 30ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் மன்னார் வளைகுடா மண்டபம் தென்கடல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத படகு ஒன்று மணாலி தீவு அருகே இருந்ததை அதிகாரிகள் கவனித்துள்ளனர். அப்போது படகில் இருந்தவர்கள் ரோந்துப்பணி மேற்கொண்ட அதிகாரிகளை கண்டதும், தப்பிக்க முயன்றதுடன் படகில் இருந்த 2 பார்சல்களை எடுத்து கடலில் வீசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் படகில் இருந்தவர்களை பிடித்தனர்.

இதையடுத்து அவர்களை இந்திய கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம், வேதாளையை சேர்ந்த 2 பேர், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் என தெரியவந்தது. மேலும் அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய விசாரணை மூலம் கடந்த மே 30ம் தேதி இரவு வேதாளையை சேர்ந்த மேலும் இருவரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அளித்த தகவலின் படி 21 கிலோ 269 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடலில் வீசிய பார்சலை மத்திய வருவாய் துறை அதிகாரிகள் 3 வது நாளாக நேற்று தீவிரமாக தேடி வந்தனர். கடலுக்கு அடியில் சென்று தேடும் இந்திய கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் மூழ்கி முத்து எடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என 15 பேர் கொண்ட குழு நவீன சாதனங்களின் உதவியுடன் கடலில் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணியை மேற்கொண்டனர். கடல் சீற்றத்தால் தேடும் பணி தொய்வடைந்து வந்தது.

மேலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே தொடர்ந்து நடந்த தேடும் பணியில் மணாலி தீவு – சிங்கிலி தீவு இடையே கடலுக்கு அடியில் வீசிய பார்சல் மீட்கப்பட்டது. அதில் 11 கிலோ 600 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றியதாக மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 3 நாள் சோதனையில் 20.20 கோடி மதிப்புள்ள 32 கிலோ 869 கிராம் எடை கொண்ட தங்கம் கைப்பற்றப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்த தங்கக்கட்டிகள் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். படகு மூலமாக கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT