Skip to main content

மகளிரிடம் நடத்தப்படும் கணக்கெடுப்பை தமிழகம் முழுவதும் நீட்டிப்பதில் என்ன சிக்கல்? - ராமதாஸ்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Ramdas urges Tamil Nadu government to conduct caste-wise census

 

சமூகநீதியைக் காக்க பேருந்துகளில் மகளிரிடம் நடத்தப்படும் கணக்கெடுப்பை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பதில் என்ன சிக்கல்? என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தமிழக அரசிட்ம கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிகையில், “தமிழ்நாட்டில் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் அவர்களின் சாதி, வயது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திரட்டப்படுவது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இத்தகைய விவரங்கள் திரட்டப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதன் சமூகநீதித் தேவைகளை வலியுறுத்தியிருக்கிறார் போக்குவரத்து அமைச்சர். அரசின் நிலைப்பாடு மிகவும் சரியானது தான். அரசுப் பேருந்துகளில் சமூகநீதியைக் காக்கும் அணுகுமுறை ஒட்டுமொத்த மாநிலத்திலும் சமூகநீதியை காப்பதில் கடைபிடிக்கப்படாதது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கேள்வி.

 

நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து, அதனடிப்படையில் திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவே தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்? அதில் என்ன சிக்கல் உள்ளது?

 

கொள்கை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்வதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறுகிறார். ஆனால், அதை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக பீகார் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறிவிட்ட நிலையில், மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த  வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை தாரை வார்ப்பது இல்லையா?  மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் முதலமைச்சர், சமூகநீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?

 

மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல் இப்போது நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதன் நோக்கத்தையும், தேவையையும் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசின் வாயிலாகவே நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை” - முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 27/02/2024 | Edited on 28/02/2024
reputation is unmatched CM MK Stalin resilience

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.2.2024) தலைமைச் செயலகத்தில் சண்முகையா - வடக்குத்தியாள் அத்தம்பதியரின் வீரதீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். அப்போது  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!. எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

reputation is unmatched CM MK Stalin resilience

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “விபத்துக்குள்ளான லாரி கவிழ்ந்து கிடந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, டார்ச்லைட் அடித்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் தென்காசி பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான வயதில் முதிய தம்பதியினர் சண்முகையாவும் வடக்கத்தி அம்மாளும். இவர்கள் இருவரும் நொடிப்பொழுதில் சிந்தித்து துரிதமாகச் செயல்பட்ட காரணத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர். இந்த தம்பதியின் துணிச்சலைப் பாராட்டி நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி பாராட்டினோம். சண்முகையா - வடக்கத்தி அம்மாள் தம்பதியினரின் மனித நேயமும் - வீரமும் போற்றுதலுக்குரியவை. அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் சமூகநீதி சூறையாடல்: அரசே துணை போவதா? - ராமதாஸ் கண்டனம்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Social Justice Looting Against Reservation in Periyar University says ramadoss

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எதிரான பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூகநீதி சூறையாடப்படுகிறது: அதற்குத் தமிழக அரசே துணை போவதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 12 பேராசிரியர்கள் உள்ளிட்ட 26 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு (சிண்டிகேட்) ஒப்புதல் அளித்திருக்கிறது. 26 ஆசிரியர் பணியிடங்களில் 17 பணியிடங்கள் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், அந்த இடங்கள் பொதுப் போட்டிப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதும், அதற்கு தமிழக அரசே ஆதரவளித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.

பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் 114 ஆம் கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் நாள் நடைபெற்றது. அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில், கூட்டத்தின் முடிவுகள் இப்போது தான் வெளியிடப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு 12 பேராசிரியர்கள், 9 இணைப் பேராசிரியர்கள், 5 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 26 ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.  இந்தப் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையான 200 புள்ளி ரோஸ்டர் விதிகளுக்கு முரணாக அனைத்துப் பணியிடங்களும் பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது சமூக அநீதியாகும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்படவிருக்கும் 26 பணியிடங்களில் 10 பேராசிரியர்கள், 5 இணைப் பேராசிரியர்கள், 2 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 17 பணியிடங்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்பப்பட்டவையாகும். 200 புள்ளி ரோஸ்டர் விதிப்படி, மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படும் போது, முதல் பணியிடம் பொதுப்போட்டி பிரிவுக்கும், இரண்டாவது பணியிடம் பட்டியல் வகுப்பு (அருந்ததியர்), மூன்றாவது பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, நான்காவது பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, ஐந்தாவது இடம் பொதுப்போட்டி பிரிவு, ஆறாவது இடம் பட்டியலினம், 15-ஆவது இடம் இஸ்லாமியர்கள், 50-ஆவது இடம் பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக இந்த 17 பணியிடங்களும் மீண்டும் பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்புவதை அனுமதிக்கவே முடியாது.

பொதுப்போட்டிப் பிரிவில் முதல் முறை நிரப்பப்பட்ட பணியிடத்தை அடுத்த முறை அருந்ததியரைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்பதற்கு பெரியார் பல்கலைக்கழகத்திலேயே முன்னுதாரணங்கள் உள்ளன. இப்போது நிரப்பப்படவுள்ள 12 பேராசிரியர் பணியிடங்களில் ஒன்றான ஆங்கிலத்துறை பேராசிரியர் பணி பத்தாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. அந்த பணியிடத்தை நிரப்புவதற்காக 2015 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அப்போது அந்தப் பணியிடம் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்போது நியமனம் நடைபெறவில்லை. 2015 ஆம்  ஆண்டில் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட பணி இப்போது பொதுப்போட்டிக்கு மாற்றப்பட்டது  எப்படி?  என்பதை பல்கலைக்கழக நிர்வாகமும், அதன் தவறுகளுக்கு துணை போகும் அரசும் தான் விளக்க வேண்டும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் முதல் முறை பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு, பின்னர் காலியான நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  நிரப்பப்பட்டன. அப்போதும் இந்த பணியிடங்கள் விதிகளுக்கு மாறாக பொதுப்போட்டிக்கு மாற்றப்பட்டன. அதைக் கடுமையாக கண்டித்து 18.09.2022 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டேன். பெரியார் பல்கலையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் பழனிசாமி தலைமையிலான விசாரணைக்குழு, இது தவறு என்று அதன் விசாரணை அறிக்கையில் கூறியிருக்கிறது.

அரசின்  விசாரணைக் குழுவால் தவறு என்று உறுதி செய்யப்பட்ட சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் செய்வதையும், அதை தவறு என்று கூறிய தமிழக அரசு, அத்தவறுக்கு இப்போது ஆதரவு அளித்து அங்கீகரிப்பதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூக நீதி சூறையாடல்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறையும், அதனால் நியமிக்கப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துணை போவதாகவே கருத வேண்டியுள்ளது. அருந்ததியருக்கு இப்படி ஒரு சமூக அநீதியை இழைத்த தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர் பணிகளில் அருந்ததியர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. பெரியார் பல்கலைக்கழகம் இப்போது அரங்கேற்றவுள்ள இந்த விதி மீறலால், பட்டியலின அருந்ததியருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படும். அதுமட்டுமின்றி, இந்த 17 பணியிடங்களும் அடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்படுவதற்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும். சிலரின் சுயநலத்திற்காக மற்றவர்களுக்கான சமூகநீதி பறிக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக உழைத்தவர்களில் முதன்மையானவர் தந்தைப் பெரியார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சமூகநீதி சூறையாடல்கள் நடைபெறுவதை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொருமுறையும் இத்தகைய சமூகநீதி சூறையாடல்கள் குறித்து விவாதிக்கப்படுதல், விசாரிக்கப்படுவதல் ஆகியவற்றுடன் அந்த குற்றத்தை அரசு கடந்து செல்வதால் தான் இவை அடிக்கடி நிகழ்கின்றன. இத்தகைய சமூக அநீதிகளுக்கு துணைவேந்தரும், பதிவாளரும் பொறுப்பாக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் இனியும் சமூக அநீதி நடக்காமல் தடுக்க முடியும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 26 ஆசிரியர் பணியிடங்களை பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கி ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பல்கலைக்கழகமும், அரசும் கைவிட வேண்டும். அவற்றில் 17 பணியிடங்களை அருந்ததியர் பிரிவுக்கு ஒதுக்கி ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்தை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் நடைபெறவுள்ள பணி நியமனங்களில் 200 புள்ளி ரோஸ்டர் துல்லியமாக பின்பற்றப் படுவதையும், அதற்கான பதிவேடு  பராமரிக்கப்படுவதையும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும், உயர்கல்வித்துறையும் உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.