Skip to main content

சாதாரண ஆள் இல்ல இவரு... தற்கொலைக்கு முயன்றவரையே காப்பாற்றியவரு... மாணவனைப் பாராட்டிய எஸ்.பி!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

மன அழுத்த மிகுதியால் எட்டாம் வகுப்பு மாணவன் புளியமரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், மரம் ஏறி அவனைக் காப்பாற்றியுள்ளான் சக மாணவன் ஒருவன். சம்பவத்தை அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரோ மாணவனை நேரில் அழைத்து அவனுடைய வீரத்தைப் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார்.

RAMANATHAPURAM POLICE COMMISSIONER VARUN KUMAR  SP congratulated the student!

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக வருண் குமார் பதவியேற்றவுடனேயே, " இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மேல்தளத்திலேயே மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அதிரடியாக அறிவித்தார். அறிவித்தது போல், இன்று மாவட்டத்திலுள்ள 8 சரக டிஎஸ்பிகளையும் வரவழைத்து, அவர்களது முன்னிலையில் புகார்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இவ்வேளையில், பேரையூர் காவல் நிலைய சரகம் கருங்குளத்தை சேர்ந்த வழிவிடுமுருகன் என்பவரது மகனான எட்டாம் வகுப்பு வடிவேலனையும், அவரது பெற்றோரையும் வரவழைத்த மாவட்ட எஸ்.பி.," சாதாரண ஆள் இல்ல சார் இவரு.. புளியமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த சக மாணவனை ஒரு விநாடி கூட தாமதிக்காமல் மரம் ஏறி காப்பாற்றியவரு. அவரோட வீரத்தை என்னவென்று சொல்ல..? அதனால் தான் உங்க முன்னாடி பாராட்டலாம்னு வரச்சொன்னேன்." என புகழ்ந்து பாராட்டி விட்டு மாணவனின் பெற்றோர் முன்னிலையில் மாணவனுக்கு பரிசையும் வழங்கி கௌரவித்தார்.

RAMANATHAPURAM POLICE COMMISSIONER VARUN KUMAR  SP congratulated the student!

பாராட்டுதலுக்குரிய மாணவன் வடிவேலுவோ., "அவனும் என் கூடத்தான் எட்டாம் வகுப்பு படிக்கிறாக..! உடையார்கூட்டம் தான் அவனுக்கு சொந்த ஊரு... எப்பப் பார்த்தாலும் சாகுறதைப் பத்தி பேசிக்கிட்டிருப்பால... நாங்களும் கண்டும் காணாமல் இருப்போம். இப்ப என்னடான்னா நேற்று (11/11/2019) மத்தியானம் ஸ்கூல் இடைவேளை பெல்லில் யூரின் பாஸ் பண்ணிட்டு, புளியங்காயை சாப்பிடலாம்னு எம்கூட வெளிய வந்தவுக, மரத்தில ஏறி தூக்குப் போட்டுக்கிட்டாக.. பதறிப் போன நான் மரத்து மேல ஏறி அவன் இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு கத்த ஆரம்பிச்சேன். அப்புறம் பக்கத்துல இருந்தவங்க, ஸ்கூலில் இருந்தவங்க வந்து அவனை காப்பாத்துனாக.. அவ்வளவுதான்." எனக் கூற அவ்விடத்திலுள்ள அதிகாரிகள் அத்தனை பேரும் கைத்தட்டி பாராட்டி மகிழ்ந்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.