
1985-86-ல் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்கள் மீண்டும் சந்தித்த நிகழ்வு ரொம்பவே நெகிழ்ச்சியாக நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொருவரின் பேச்சு, குரலை வைத்து அடையாளம் கண்ட நிகழ்வும் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை இசிஜி ஆபரேட்டர் வில்சன் புஷ்பராகம், “நம்மோடு 35 வருடங்களுக்கு முன்பு 10ம் வகுப்பு படித்த தோழர்களும் தோழிகளும் ஒருமுறை அனைவரையும் ஒன்றாகக் கூடி சந்திக்க வேண்டும் என்று தொடர்பில் இருந்த நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தவர், அதற்காக பழைய மாணவர்கள் அனைவரின் செல்பேசி எண்களைத் தேடிக் கண்டறிந்து பள்ளிப் பருவ நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்” என்று அந்த பழைய மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும், “இந்த தேடலுக்காக சில மாதங்கள் ஆனது” என்றும் தெரிவித்தார்.
இவர்களோடு படித்த பலர் வணிகர்களாகவும், ஆசிரியர்களாகவும் தமிழகம் முழுவதும் பரவியுள்ளனர். பலர் கரோனா ஊரடங்கால் தொழில் செய்ய முடியாமல் சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர்.
ஒன்றிணையும் நாள் வந்தது.. ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், கார்மேகம், ஜெர்மினியான்ஸ், தாமஸ் ஆகியோர் சந்தோஷ மனநிலையில், “யாரெல்லாம் வருவாங்களோ, வந்தாலும் நமக்கு அடையாளம் தெரியுமா? ஆளே மாறி இருப்பாங்களே. பள்ளியை விட்டு போன பிறகு இதுவரை பார்க்காதவங்க நிறையப் பேர் இருக்காங்களே, எப்படி அடையாளம் கண்டு அழைப்பது. அவங்களா தன்னை அறிமுகம் செய்வாங்களா” என்று நெஞ்சு படபடப்போடு வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர்.
மற்றொரு பக்கம் கடல் மீன்களோடு மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது. கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் படித்த பள்ளியில் இல்லாமல் கடலோரத்தில் ஒரு தோப்பில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது.
ஒவ்வொருவராக வரவர அவர்களில் சிலர் அடையாளம் தெரிந்து கொண்டு பெயர் சொல்லி அழைக்கும் போதே.. ஆனந்தக் கண்ணீரும் வந்துவிட்டது. “டேய் எப்படிடா இருக்கே” என்று சில பெண்கள் பழைய தோழர்களாகவே அழைத்தனர். “ஏய் என்னப்பா பெரிய ஆளாகி பேரன்களையும் பார்த்துட்டோம்; நீ டேய்னு அழைக்கிறேனு” கேட்க.. “நீ தாத்தாவா இருந்தாலும் எனக்கு தோழன் தான்டா” என்ற அந்த பேச்சுகளை ரசித்தனர்.
சிலரது சிரிப்பு, மாறாத சில வார்த்தைகளுமே அவர்களை அடையாளம் காட்டியது. 35 பேர் இந்த மீள் சந்திப்புக்கு வந்திருந்தனர். பலர் தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். “நாம 35 வருசத்துக்குப் பிறகு ஒன்று கூடி இருக்கிறோம். அதனால குலுக்கல் முறையில தங்கக் காசும், வெள்ளிக்காசும் தரப்போறேன்” என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் சாம்நியூபிகின் நண்பர்களை உற்சாகப்படுத்தி, இரு தங்கக்காசுகளும், இரு வெள்ளிக்காசுகளும் பரிசாக வழங்கினார்.
தங்கக்காசுகள் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, பார்வதிக்கும், வெள்ளிக்காசுகள் சக்திவேல், தமிழரசிக்கும் வழங்கப்பட்டன. சென்னை, மதுரை போன்ற பல ஊர்களிலிருந்து வந்தவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பள்ளிப் பருவ நண்பர்களை உணர்ச்சிப் பெருக்கோடு சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர். நம்மில் சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். அவர்களையும் இப்ப நினைத்துப் பார்க்கிறோம். இனிமேல் ஒவ்வொரு வருசமும் சந்தித்தால் நல்லா இருக்கும் என்று கூடிப் பேசி கலைந்து சென்றனர். இத்தனை வருசத்துக்குப் பிறகு சந்திச்ச இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றனர்.