/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sankar8999.jpg)
ஊரடங்கு காலத்தில் மக்களின் அவசர, அத்தியாவசிய பயணத்திற்காக மாவட்ட ஆட்சியர் மூலம் தரப்படும் அனுமதிச்சீட்டினை, பணத்திற்காக ஆட்சியர் கையெழுத்துடன் போலியாக அனுமதிச்சீட்டு தயார் செய்து கொடுத்த நபர்களை காவல்துறை கைது செய்தது அதிர்ச்சியளித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய் தொற்றுக் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்க பொதுப்பயணம் முற்றிலும் தடைப்பட்டது. இதில் மருத்துவ சிகிச்சை, துக்க நிகழ்வு, முன்னரே முடிவு செய்யப்பட்ட திருமணம் உள்ளிட்ட பல அவசர நிகழ்வுகளுக்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட தமிழக அரசும், முக்கிய நிகழ்வுகளுக்கு செல்வதாக இருப்பவர்கள் அதற்கான ஆவணங்களைக் கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பின், பயணத்திற்கான அனுமதிச்சீட்டு கிடைக்கும் என்றும், இதனை ஆன்லைன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. முறையாக ஆவணங்களைக் காண்பித்து இந்த அனுமதிச்சீட்டினைப் பெற்று எண்ணற்றவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கீழக்கரைப் பகுதியினை சேர்ந்த ஒருவர், முன்னாள் காவல்துறை அதிகாரி துணையுடன் பணத்திற்காக போலியாக ஆட்சியர் கையெழுத்துடன் அனுமதிச் சீட்டினை வழங்கியது தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாசில்தார் செந்தில்வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலியாக அனுமதி சீட்டினை தயாரித்து அதன் மூலம் சென்னைக்கு பயணம் செய்து, திரும்ப கீழக்கரை பகுதிக்கு வர முயற்சித்த கீழக்கரை வள்ளல் சீதக்காதித் தெருவினை சேர்ந்த சங்கர், அதே கீழக்கரையை சேர்ந்த முகமது அப்துல் கான், முகமது தில்லாகான், அசதுபாத்திமா மற்றும் சமீர் ஆகியோருடன், சென்னை மைலாப்பூரை சேர்ந்த சல்மா ராணி, முகமது ஆபிதா பேகம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட, இவர்களோடு நைனா முகமது, முகமது மதார் நிசார், முகமது ஆசிப், மிஸ்பஹ் உள் அமீன், அகமது அப்துல் காசிம் மற்றும் நைனா முகமது ஷாஜகான் ஆகியோரும் விசாரணை வளையத்திற்குள் வந்தனர்.
"கீழக்கரை வள்ளல் சீதக்காதித் தெருவில் ஸ்டுடியோவினை நடத்தி வந்த சங்கர் அப்பகுதியின் பகுதி நேர எழுத்தராக நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கின்றார். இவருக்கும், கீழக்கரைப்பகுதியில் காவல்துறையில் ஓசிஐயூ -வின் எஸ்.ஐ.யாகப் பணியாற்றிகடந்த ஒன்றாம் தேதியில் பணி நிறைவுப் பெற்ற பற்குணம் என்பவருக்கும் நீண்ட நாள் பழக்கம் இருந்து வந்துள்ளது.
அதனடிப்படையில் காவல்துறை வட்டாரத்தில் தனக்கு வேண்டியவற்றை சாதித்து வந்த சங்கரிடம், "சென்னைக்கு சென்று தன்னுடைய உறவினர்களை அழைத்து வர ஆட்சியரின் அனுமதி சீட்டு வாங்கித் தரவேண்டி நைனாமுகம்மது என்பவர் அணுகியிருக்கின்றார்." அவரும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தலா ரூ.2 ஆயிரம் தரவெண்டுமென TN67-L- 9799 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா வாகனத்திற்கு 21-04-2020 டூ 24-04- 2020 தேதி வரை ஆட்சியர் வீரராகவின் கையெழுத்துடன் அனுமதிச்சீட்டினை வழங்கியிருக்கின்றார்.
அனுமதி சீட்டினை வாங்கிக்கொண்டு சென்னை சென்று திரும்பிய அந்த வாகனம் மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டியில் நிறுத்தி சோதனையிட அது போலியான அனுமதிச்சீட்டு என தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் போலியாக அனுமதிச்சீட்டு வழங்கிய சங்கரை பிடித்து விசாரிக்கையில், இதுபோல் 20- க்கும் மேல் அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இவருக்கு உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ.பற்குணத்தையும் விசாரித்து வருகின்றோம்." என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_321.gif)