Skip to main content

முழு ராணுவ மரியாதையுடன் விதைக்கப்பட்டார் பழனி!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

RAMANATHAPURAM DISTRICT ARMY SOLDIER INCIDENT INDIA - CHINA BORDER


லடாக் பகுதியில் வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பதால், உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் பூத உடல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, முப்படை வீரர்களின் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

தங்களது எல்லைப் பகுதியினையொட்டி சாலைகளும், விமானத் தளங்களையும் கட்டமைப்பு செய்து வரும் இந்தியாவினை எதிர்க்க, சமீபத்தில் தனது எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவித்த சீனாவிற்குப் போட்டியாக இந்தியாவும் ராணுவத்தைக் குவித்தது. போர்ப் பதற்றம் தொற்றிய நிலையில், ராணுவ மட்டத்திலான இரு தரப்பு உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தையினை தொடங்கினர். 
 

RAMANATHAPURAM DISTRICT ARMY SOLDIER INCIDENT INDIA - CHINA BORDER


எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய தரப்பினை சேர்ந்த ராணுவ வீரர்கள் 20 நபர்கள் சீனா ராணுவ வீரர்களால் கொல்லப்பட்ட செய்தி வெளியானது. வீரமரணமடைந்த வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகனான பழனியும் ஒருவர். கடந்த 22 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்த வீரமரணமடைந்த பழனியின் பூத உடலை, சொந்த ஊரிலேயே நல்லடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது உறவினர்களின் விருப்பம் என்பதால், நேற்றைய தினம், நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தினை ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் வீரராகவ் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

 

இவ்வேளையில், வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் பூத இடல் மதுரை விமான நிலையத்தை வந்தடைய, மதுரை பாராளுமன்ற எம்.பி.வெங்கடேசன், எம்.எல்.ஏ.சரவணன் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் பழனியின் உடலை வரவேற்று, அஞ்சலி செலுத்தி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

திருவாடனை தாலுகா, திருப்பாலைக்குடி காவல் எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தில், குறிப்பிட்ட இடத்தில் ராணுவ வீரர் பழனியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட, ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. இறுதியாக முப்படை வீரர்கள் கலந்து கொள்ள, முழு ராணுவ மரியாதையுடன் வீர மரணமடைந்த பழனியின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, பழனியின் மேல் போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி பழனியின் மனைவி வானதி தேவி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதே வேளையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.20 லட்சமும் பழனியின் மனைவியிடம் வழங்கப்பட்டது. தேசப்பற்று மிகுந்த பழனி புதைக்கப்படவில்லை எல்லோரது மனதில் விதைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் அக்கிராம மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.