/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/temple-art.jpg)
சோழர்களால் வெற்றிச் சின்னமாக கட்டப்பட்ட 850 ஆண்டுகள் பழமையான கோயிலைப்புனரமைத்துப் பாதுகாக்க வேண்டும் எனத்தொல்லியல் ஆய்வு நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் மிக நீண்ட கடற்கரையைக்கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில்ஓடைகள், ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் உள்ள உப்பங்கழிகள் மூலம் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. அவ்வாறான ஒரு இயற்கைத் துறைமுகமாக தொண்டி அருகில் உள்ள பாசிப்பட்டினம் கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் இருந்துள்ளது. இவ்வூர் பாசி ஆற்றின் கரையில் உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இவ்வூரில்கடற்கரை அருகில் பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோயில் உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், பலிபீடம் என்ற அமைப்பில் உள்ள இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கிலும் ஒரு வாசல் உள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறுகையில், "இக்கோயிலின்விமானம் வண்டிக்கூடு போன்ற அமைப்பில் சாலை விமானமாக அமைந்துள்ளது. விமானத்தின் அதிஷ்டானம் ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம், பட்டிகை என பாதபந்த அதிஷ்டானமாக அமைந்துள்ளது. அடுத்து வேதிகையும், அதன் மேல் அமைந்த பாத சுவரில் கோட்டபஞ்சரங்களும், அரைத் தூண்களும், தேவகோட்டங்களும் காணப்படுகின்றன. பிரஸ்தரம் வரை முழுவதும் கருங்கற்களாலும், அதற்கு மேல் தளம், கிரீவம், சிகரம் ஆகியவை செங்கல், சுண்ணாம்பு கொண்டும் கட்டப்பட்டுள்ளன.
மதுரையை ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனுக்கும், திருநெல்வேலியை ஆட்சி செய்து கொண்டிருந்த குலசேகரப் பாண்டியனுக்கும் மதுரையை ஆட்சி செய்வதில் நடந்த போரின்போது, கி.பி.1168-ல் பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இலங்கை பராக்கிரமபாகுவின் படையும், குலசேகரப் பாண்டியனுக்கு ஆதரவாக வந்தஇரண்டாம் ராஜாதிராஜ சோழன் படையும் தொண்டி பாசிப்பட்டினத்தில் போரிட்டதாக ஆரப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கிறது. இப்போரில் சோழர் தோற்றனர். பின்பு நடந்த போர்களில் சிங்களப் படையை சோழர் வென்றனர்.
சோழநாட்டின் எல்லையான சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் தேவிப்பட்டினம் வரையிலான பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் முதலாம் ராஜராஜ சோழன் காலம் முதல் சோழர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது. இப்பகுதிகளில் சோழநாட்டு வீரர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிங்களப் படையிடம் தோற்றுப் போன, பாசிப்பட்டினத்தில், தங்கள் வெற்றியின் அடையாளமாக எட்டு கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசியம்மனுக்கு ஒரு கோயிலை கி.பி.1168-க்குபின் சோழர்கள் எடுப்பித்துள்ளனர். 850 ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் மேல் பகுதியில் மரங்கள் வளர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதைப் புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)