
தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலக்க சரியான தகவல் அளிப்பவருக்கு ரூபாய் 50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று சிறப்பு புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29- ஆம் தேதி அன்று தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திருச்சி மாவட்டம், தில்லைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது தகவல்கள், கடிதங்கள், குறுஞ்செய்திகள் பெறப்பட்டு வருவதாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை குறித்த விசாரணையில் துப்புத் துலக்க சரியான தகவல்களை அளிப்பவருக்கு ரூபாய் 50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான தகவலை 90806- 16241, 94981- 20467, 70940- 12599 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.