ADVERTISEMENT

ராமஜெயம் கொலை வழக்கு; கொலையாளியை நெருங்கிவிட்டதா சி.பி.சி.ஐ.டி? - டி.ஜி.பி ஷகீல் அக்தர் பதில்

11:45 AM Oct 22, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச் சோலையில் காவிரி ஆற்றின் கரையோரம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பரபரப்பு ஏற்படுத்திய இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார், என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.

இந்த நிலையில் வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான டி.எஸ்.பி மதன் மற்றும் ஆய்வாளர்கள் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் கணேசன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2000ம் ஆண்டு மயிலாப்பூர் எம்.எல்.ஏ. பாலன் நடைபயிற்சி மேற்கொண்டபோது 16 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயமும் அதேபோல் நடைபயிற்சி மேற்கொண்டபோது கடத்தி கொல்லப்பட்டதால் முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய கணேசன் மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணை குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை செய்தனர். இவர்களை திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து பின்னர் விடுவித்தனர்.

ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் குற்றவாளிகளின் இறுதிப்பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு தயார் செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ, எம்.கே.பாலன் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த நரைமுடி கணேசன், தினேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார், மோகன்ராம் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி ஷகீல் அக்தர் இன்று திருச்சி சென்றார். விரைவில் இவர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் திருச்சி சென்றடைந்த சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி ஷகீல் அக்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் “விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை முடிவடைந்ததும் உங்களிடம் அனைத்தும் தெரிவிக்கிறேன். தற்போது எந்த தகவலும் சொல்ல முடியாது. உண்மை கண்டறியும் சோதனை எதுவும் தற்போது நடத்த திட்டமில்லை. ஆனால் சில துப்புகள் உள்ளன. அதனை ஆராய்ந்த பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன். சில தகவல்கள் உள்ளன. அதனை ஆராய்ந்த பிறகே சொல்ல முடியும். ஒரு கொலையில் நமக்கு ஆதாரங்கள் அவசியம் தேவை. அதனை ஆராய்ந்த பிறகு தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், “கொலையாளியை நெருங்கிவிட்டீர்களா” என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “பார்ப்போம்...” என்று தெரிவித்தார். மேலும், வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறப் போகிறீர்கள் அதற்குள் இந்த வழக்கு முடிந்துவிடுமா என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பார்ப்போம்...” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT