Advertisment

பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்! ராமதாஸ்

ramadoss

புதுக்கோட்டை ஆலங்குடியில் தந்தைப் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களையும், அதற்கு தூண்டியவர்களையும் அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் அமைக்கப்பட்டிருந்த தந்தைப் பெரியார் உருவச் சிலையின் தலையை சில சமூக விரோதிகள் துண்டித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த இரு வாரத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிகழ்வு இதுவாகும். காட்டுமிராண்டித்தனமான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

Advertisment

தந்தைப் பெரியார் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூகநீதியின் அடையாளமாக திகழ்கிறார். அவரது சிலைகளை சேதப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும், துடிப்பவர்களும் பகுத்தறிவற்ற முட்டாள்களாகவும், அயோக்கியர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் தான் இருக்க வேண்டும். ஏனெனில் தந்தைப் பெரியார் சிலைகளில் வாழவில்லை. மாறாக, தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் வாழ்கிறார்; பல தலைமுறைகளுக்கு வழி காட்டும் அவரது கொள்கைகளில் வாழ்கிறார்; சமூக நீதியில் வாழ்கிறார். இதை உணராமல் தந்தைப் பெரியாரின் சிலைகளை உடைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் அவர் உருவாக்கி வைத்த உணர்வுகளை அழித்து விடலாம் என்று நினைப்பவர்களை இதை விட கண்ணியமாக எப்படி வர்ணிக்க முடியும்? அவர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன்.

இந்தியாவில் எந்த தலைவரையும் மக்கள் தந்தையாகவும், பெரியாராகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தப் பெருமை தந்தைப் பெரியாருக்கு மட்டும் தான் உண்டு. ஏனெனில் அடக்கி ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த மக்களுக்கு தந்தையாக இருந்து போராடினார்; பாதுகாத்தார்; அதனால் அவர் பெரியாராக உயர்ந்தார். பெரியாரின் கொள்கைகள் இன்னும் நூறு நூற்றாண்டுகள் ஆனாலும் தங்களின் இலக்கை அடைய முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தான் அவரின் சிலைகளை சேதப் படுத்தி தங்களின் அரிப்பையும், வெறுப்பையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்வது தான் நேர்மையாகும். அதை சிலரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் சிலைகள் அவமதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால், தந்தைப் பெரியாரின் சிலையிலிருந்து தலையை துண்டித்த நிகழ்வு நடந்ததில்லை. தந்தைப் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று கொக்கரித்தவர்கள் தாங்கள் நினைத்ததை நடத்திக் காட்ட முடியும் என்பதை நிரூபிப்பதற்காக நள்ளிரவில் வந்து இந்த செயலைச் செய்து விட்டு போயிருக்கிறார்கள்.

அவர்களுக்கு இத்தகைய துணிச்சல் எங்கிருந்து வந்தது? தமிழ்நாட்டில் தந்தைப் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று கொக்கரித்தவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரியாரின் வழிவந்த கட்சியைச் சேர்ந்தவராக கூறிக் கொள்ளும் பினாமி முதலமைச்சர் பழனிச்சாமி, பெரியாரை விமர்சித்தவரை கண்டிக்காமல் அவரது அட்மினை விமர்சித்து தனது வீரத்தைக் காட்டினார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் இருவரும் 10 நாட்களில் பிணையில் வெளிவரும் அளவுக்கு தான் அவர்கள் மீது தமிழக அரசு வலிமையாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அரசுக்கு எதிராக ஆவேசமாகப் பேசினால் குண்டர் சட்டத்தை ஏவும் தமிழக ஆட்சியாளர்களுக்கு இந்த சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சத் துணிச்சல் இல்லையா? சிலையை சேதப்படுத்தியவர்களிடம் அரசு கருணைக் காட்டக்கூடாது.

இம்மாதத் தொடக்கத்தில் தந்தைப் பெரியாருக்கு எதிராக கொக்கரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் தான், புதுக்கோட்டை மாவட்டத்திலும் தந்தைப் பெரியாரின் சிலையை சேதப்படுத்தும் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் இனியும் நடப்பதைத் தடுக்க புதுக்கோட்டை ஆலங்குடியில் தந்தைப் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களையும், அதற்கு தூண்டியவர்களையும் அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe