Ramadoss welcomes CBI investigation confirmed in kallakurichi illicit case

“உண்மையை மூடிமறைக்கும் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நச்சு சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும்; அதை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தொடக்க நிலையிலேயே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. கள்ளச்சாராய சாவு வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டுவர வகை செய்யும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத் தக்கது.

Advertisment

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் நேர்நின்ற தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது என்றும், தமிழக அரசின் காவல்துறையே விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

”கள்ளச்சாராய சாவு வழக்கை சிபிஐ விசாரிப்பதால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது? கள்ளச்சாராய சாவு வழக்கை நீங்களே விசாரிக்க வேண்டும் என்று இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? அதுவே உங்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கை சிபிஐ அமைப்பே விசாரிக்கட்டும்” என்று நீதிபதிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வழக்கமாக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யும்போது, அதன் மீது எதிர்மனுதாரர்களுக்கு அறிவிக்கை அனுப்பி பதிலைப் பெற்று விசாரித்து தீர்ப்பளிப்பது தான் வழக்கம். ஆனால், தொடக்க நிலையிலேயே தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டிருப்பது அரிதிலும் அரிதான நிகழ்வு ஆகும்.

Advertisment

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் திமுகவின் நிர்வாகிகளும், சட்டப்பேரவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்களும் தான் முழு ஆதரவாக இருந்திருக்கின்றனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டால், அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்பதுதான் திமுக அரசின் அச்சம் ஆகும். அதனால் தான் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த தமிழக அரசு, இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது.

ஆனால், இந்த வழக்கை தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டும் என்று நீங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்? அதுவே அனைத்தையும் வெளிப்படுத்துகிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருப்பதன் மூலம், தமிழக அரசின் நோக்கத்தை அவர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுகவினருக்கு உள்ள தொடர்புகளையும், அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் மூடி மறைக்கவேண்டும் என்று திமுக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி ஆகும்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, விரைவில் தொடங்கப்படவுள்ள சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தமிழ்நாட்டில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.