Advertisment

லட்சக்கணக்கில் காலியிடங்கள் இருக்கும்போது வெறும் 3,935 பேரை தேர்வு செய்வதா?  - ராமதாஸ்

 ramadoss urges number Group 4 examination employees should be increased 10K

குரூப் - 4 பணியாளர் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தது 10 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனரும் தலைவருமான ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளுக்கு 215 கிராம நிர்வாக அலுவலர்கள், 1099 தட்டச்சர்கள் உள்ளிட்ட நான்காம் தொகுதி பணியாளர்கள் 3935 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழக அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பேரை மட்டும் தேர்வு செய்ய அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisment

தமிழ்நாடு அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினர் நான்காம் தொகுதி பணியாளர்கள் தான். தமிழக அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூறியிருக்கிறது. அவர்களில் மூன்றில் ஒரு பங்கு நான்காம் தொகுதி பணியிடங்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட குறைந்தது 2 லட்சம் நான்காம் தொகுதி பணியிடங்கள் காலியிடங்களாக இருக்கக்கூடும். அவ்வாறு இருக்கும் போது அதில் வெறும் 2 விழுக்காடு பணியிடங்களை மட்டும் நிரப்புவது எந்த வகையில் நியாயம்?

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவை அனைத்தும் நிரப்பப்படுவதுடன், கூடுதலாக 2 லட்சம் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. காலியாக இருப்பதாக திமுகவால் குறிப்பிடப்பட்ட மூன்றரை லட்சம் காலியிடங்களில் குறைந்தது ஒரு லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அவற்றுடன் கடந்த நான்காண்டுகளில் குறைந்தது 30 ஆயிரம் நான்காம் தொகுதி பணியாளர்களாவது ஓய்வு பெற்றிருக்கக் கூடும். அதன்படி நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களில் வெறும் 15 விழுக்காட்டை மட்டும் தான் திமுக அரசு நிரப்பியிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022-ல் நடைபெற்ற தொகுதி 4 தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022-23, ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கு 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு சேர்த்து 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 19,071 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது வெறும் 3935 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல. இது கடந்த நான்காண்டுகளில் புதிதாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்குக் கூட போதாது.

தமிழக அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அது வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அது குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது மொத்த அரசுப் பணியிடங்கள் எத்தனை? காலியிடங்கள் எத்தனை? கடந்த நான்காண்டுகளில் காலியான இடங்கள் எத்தனை? கடந்த நான்காண்டுகளில் நிரப்பப்பட்ட இடங்கள் எத்தனை? இப்போது ஒவ்வொரு துறையிலும் காலியாக இருக்கும் இடங்கள் எத்தனை? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்காம் தொகுதி பணியாளர் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தது 10 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss tngovt TNPSC EXAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe