Advertisment

தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பு;  என்ன செய்யப் போகிறது தமிழகம்? - கேள்வியெழுப்பும் இராமதாஸ்!

Ramadoss talk about on cauvery issue

காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. இந்த நீர் தமிழகத்திற்கு போதுமானதல்ல என்றாலும் கூட, அதைக் கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அறிவித்துள்ளனர். கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

Advertisment

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு இன்று வரை 102.30 டி.எம்.சி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகம் இதுவரை 35 டி.எம்.சி தண்ணீரைக் கூட வழங்கவில்லை. கர்நாடகத்திலிருந்து இதுவரை தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீரில் கூட பெருமளவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வந்தது தானே தவிர, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டது அல்ல.

வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு திறந்து விடுமாறு காவிரி ஒழுங்குமுறை குழு ஆணையிட்டுள்ள தண்ணீரின் மொத்த அளவு 6.25 டி.எம்.சி மட்டும் தான். இதை விட பத்து மடங்கு அதிகமாக 63.80 டி.எம்.சி தண்ணீர் கர்நாடக அணைகளில் உள்ளது. இவ்வளவு தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பது இரு மாநில உறவுகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் வலிமை சேர்க்காது.

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று அறிவித்து விட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, அந்த முடிவின் பின்னணியில் ஒட்டுமொத்த கர்நாடகமும் ஒன்றாக இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இன்றைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இது கடந்த 3 வாரத்தில் கூட்டப் பட்டிருக்கும் இரண்டாவது அனைத்துக் கட்சிக் கூட்டமாகும். இதன் மூலம் நாளை நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கும்படி அழுத்தம் கொடுக்கிறது கர்நாடக அரசு.

கர்நாடக அணைகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியே இல்லை. ஆனால், இந்த சூழலை தமிழ்நாடு எவ்வாறு சமாளிக்கப் போகிறது? கர்நாடகத்திடமிருந்து எவ்வாறு தண்ணீர் பெறப் போகிறது? என்பது குறித்து எந்த சிந்தனையும், செயல்திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. இது மிகவும் நல்வாய்ப்புக்கேடானது. காவிரி நீரைப் பெறுவதற்காக தமிழக அரசு மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.

உச்சநீதிமன்றத்திடம் வாதாடி தமிழகத்திற்கு தண்ணீர் பெறுவோம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். அது உடனடியாக நடப்பதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு ஆணையிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு அன்றே விசாரிக்கப்படுமா? மீண்டும் ஒத்திவைக்கப்படுமோ? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இத்தகைய சூழலில் உச்சநீதிமன்றத்தை மட்டுமே தமிழகம் நம்பிக் கொண்டிருப்பது சரியானதாக இருக்காது.

காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்ற யோசனையை முதலில் தெரிவித்தது நான் தான். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் தமிழகம் தொடர்ந்த வழக்கை ஆகஸ்ட் 21-ஆம் நாள் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. ஆனால், அந்த வழக்கில் இன்று வரை விசாரணை தொடங்கவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி இடைக்காலத் தீர்ப்பை பெற வேண்டும் என்ற யோசனையையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இத்தகைய சூழலில் சட்ட நடவடிக்கையுடன் அரசியல் ரீதியிலான அழுத்தமும் கொடுப்பதன் மூலமாகவே காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கு நீதியை பெற்றுத்தர முடியும்.

அத்துடன் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன என்பதை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அதற்காகவும், காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ramadoss Tamilnadu karnataka cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe