Advertisment

வளைகுடா நாடுகளில் தினமும் 10 இந்தியர் சாவு: உயிர் காக்க நடவடிக்கை தேவை! ராமதாஸ்

Statement

Advertisment

வளைகுடா நாடுகளில் சராசரியாகப் பார்த்தால் தினமும் 10 இந்தியர் உயிரிழக்கின்றனர் என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள தூதரங்களில் தென்னிந்திய மொழி தெரிந்த அதிகாரிகளை அமர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் உள்ள குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காக வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு செல்லும் இந்தியத் தொழிலாளர்கள் அங்கு அனுபவித்து வரும் கொடுமைகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறன. சவுதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற இந்தியத் தொழிலாளர்களில் 24,570 பேர் கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழந்திருக்கின்றனர் என்பது தான் அந்த அதிர்ச்சி செய்தியாகும்.

வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்றவர்கள் உயிரிழந்தது குறித்த விவரங்களை தொகுப்பதற்காக காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி என்ற அமைப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து பெற்ற தகவல்களில் இந்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. 2012-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் 10,416 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சமாக பஹ்ரைனில் 1,317 பேர் இறந்துள்ளனர். குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை இன்னும் துல்லியமாகக் கிடைக்கவில்லை. அந்த எண்ணிக்கை முழுமையாகக் கிடைத்தால் சவுதி, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார் ஆகிய 6 நாடுகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும். சராசரியாகப் பார்த்தால் வளைகுடா நாடுகளில் தினமும் 10 இந்தியர் உயிரிழக்கின்றனர் என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

Advertisment

சவுதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே 5.49 கோடி தான். இது இந்திய மக்கள் தொகையில் 25-ல் ஒரு பங்கு மட்டுமே. தமிழகத்தின் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு மட்டுமே. அவ்வளவு சிறிய நாடுகளில் 6 ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழப்பதை சாதாரணமான ஒன்றாக கருதி கடந்து சென்று விட முடியாது. மேற்குறிப்பிட்ட நாடுகளில் கத்தார் மட்டுமே உயிரிழப்புக்கான காரணங்களைத் தெரிவித்திருக்கிறது. 80% இயற்கை மரணங்கள் என்றும் 14% விபத்து மரணங்கள் என்றும், 6% தற்கொலைகள் என்றும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் அனைவருமே மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உடல் நலம் சரியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்ட பிறகு தான் அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது 80 விழுக்காட்டினர் உடல் நலம் பாதித்து இயற்கை மரணம் அடைந்ததாக கூறப்படுவதை நம்ப முடியவில்லை. விபத்து, தற்கொலைகள் சார்ந்த புள்ளிவிவரங்களும் ஐயத்தையே அளிக்கின்றன.

வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் அனைத்தையும் ஐயத்திற்கிடமானவை என்று குற்றம் சாட்ட முடியாது. ஆனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை உறுதியாகக் கூற முடியும். இந்திய அரசு விழிப்புடன் இருந்து செயல்பட்டால் அவற்றில் பெரும்பாலானவற்றை தடுக்க முடியும். வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று உயிரிழந்தவர்களில் 6 விழுக்காட்டினர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால், அங்கு அவர்களுக்கு இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஏதோ பிரச்சினைகள் இருந்திருப்பதாகத் தானே அர்த்தம்? அதை கண்டுபிடித்து தீர்த்து வைத்திருக்க வேண்டியது அங்குள்ள இந்திய தூதரங்களின் கடமை ஆகும். ஆனால், தூதரகங்கள் தங்களின் கடமையை செய்வதில் தோல்வியடைந்து விட்டதால் தான் 25,000 பேர் உயிரை இழந்திருக்கின்றனர்.

இந்தியாவுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 15 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வருவாயாக கிடைத்துள்ளது. இந்தியத் தொழிலாளர்கள் தான் தங்கள் கடுமையான உழைப்பால் அந்தத் தொகையை ஈட்டிக் கொடுத்துள்ளனர். அவ்வாறு இருக்கும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூதரங்கள் மூலமாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களில் கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். ஆனால், தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்.

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் தமிழர்கள் அங்கு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது குறித்தும், கொத்தடிமைகளாக நடத்தப்படுவது குறித்தும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இவற்றின் அடுத்தக்கட்டம் தான் உயிரிழப்புகள் ஆகும். வளைகுடா நாடுகளில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதன் மூலம் இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரில் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால் அங்குள்ள தூதரங்களில் தென்னிந்திய மொழி தெரிந்த அதிகாரிகளை அமர்த்த வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்து வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும். அதேபோல், தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Ramadoss statement
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe