Skip to main content

7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு மோசடி: ராமதாஸ் கண்டனம்

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
Ramadoss



பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்த விவகாரத்தில், உரிய விதிகள் வகுக்கப்படாத நிலையில், இல்லாத விதிகளைக் காரணம் காட்டி அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வந்தது அம்பலமாகியிருக்கிறது. எந்த அடிப்படையுமே இல்லாமல் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எழுவர் விடுதலையை மத்திய அரசு தாமதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, 
 

ராஜிவ் கொலை வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.


இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், குற்றவழக்குகளில் தண்டனைக் குறைப்பு செய்யும் அதிகாரம் எந்த அரசுக்கு உள்ளது என்பது குறித்து 7 வினாக்களை எழுப்பி அதுபற்றி முடிவெடுக்கும்படி அரசியல் சாசன அமர்வைக் கேட்டுக்கொண்டார்.


அவரது  ஓய்வுக்குப் பிறகு 7 பேர் விடுதலை குறித்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், யாருக்கு அதிகாரம் என்பது குறித்த வழக்கை  தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளின்படி தண்டனைக் குறைப்பு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்  மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்று அரசியல் சாசன அமர்வு 02.12.2015 அன்று தீர்ப்பளித்தது.

 

அதைத் தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளின்படியும், அரசியலமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 73 ஆவது பிரிவின்படியும் தண்டனைக் குறைப்பு செய்வதற்காக மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின் நகல்களை வழங்கக்கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பேரறிவாளன் விண்ணப்பித்து இருந்தார்.
 

அந்த விண்ணப்பம்  கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தான் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுக்கும்படி நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 23.01.2018 அன்று மத்திய அரசுக்கு ஆணையிட்டிருந்தது.

 

ஆனால், 7 தமிழர்களை விடுதலை செய்ய அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறிவிட்டது. அதுமட்டுமின்றி, 7 தமிழர் விடுதலைக்கு குடியரசுத் தலைவர் அனுமதி மறுத்து விட்டதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. அதன்தொடர்ச்சியாகத் தான் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் 7 தமிழர்களை மாநில அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அதன்படி  7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக ஆளுனருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அமைச்சரவையின் பரிந்துரை கடந்த 81 நாட்களாக ஆளுனர் புரோகித்தின் பரிசீலனையில் உள்ளது.
 

இத்தகைய சூழலில் தான் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு நடத்திய மோசடியான நாடகங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. 08.01.2016 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பேரறிவாளன் வினவிய வினாக்களுக்கு மத்திய உள்துறை இப்போது அளித்துள்ள பதில்கள் தான்  நாடகங்களை அம்பலப்படுத்தியுள்ளன.
 

மத்திய உள்துறை அளித்துள்ள பதிலில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-435 பிரிவுகளின் கீழ் தண்டனைக் குறைப்பு செய்வது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த விதிகளையும் வகுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
 

7 தமிழர்களின் தண்டனைக் குறைப்பு  குறித்த பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றால், அதை சில சட்டங்கள் அல்லது விதிகளின்படி தான் செய்ய முடியும். ஆனால், தண்டனைக் குறைப்பு குறித்த விதிகள் வகுக்கப்படாத நிலையில், மத்திய அரசு எவ்வாறு தண்டனைக் குறைப்பு குறித்த பரிந்துரையை நிராகரிக்க முடியும்?

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை ஆகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், விதிகளே இல்லாத சூழலில் தங்கள் விருப்பப்படி அது குறித்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதன் மூலம் 7 தமிழர்கள் விடுதலையை மத்திய அரசு இரு ஆண்டுகள் தாமதப் படுத்தியுள்ளது.  
 

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலும் ஆகும். 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்ய அற்புதமான வாய்ப்பு கிடைத்த நிலையில், மத்திய அரசு சொந்த வெறுப்பு காரணமாக அவர்களின் விடுதலைக்கு எதிராக முடிவெடுத்து சதி செய்திருக்கிறது. இதனால் 7 தமிழர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகளை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்.
 

 

இது ஒருபுறமிருக்க 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து  இன்றுடன் 81 நாட்கள் ஆகும் நிலையில் அதன் மீது முடிவெடுக்காமல் ஆளுனர் தாமதம் செய்வதும்  மனித உரிமை மீறலாகும். 7 தமிழர்கள் விடுதலையை தாமதம் செய்ய எந்த நியாயமான காரணங்களும் இல்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் 7 தமிழரையும் விடுவித்து ஆளுனர் ஆணையிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.