Ramadoss says Pongal incentive should be provided to part-time teachers

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிலைப்புக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நிலையில், பொங்கல் திருநாளையொட்டி தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு ஆய்வு செய்ய மறுக்கிறது. தமிழக அரசின் மனித நேயமற்ற இந்த அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Advertisment

பகுதி நேர ஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான்.அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாமக-வின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், 181-ஆம் வாக்குறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சொல்வதைச் செய்வதாகக் கூறிக் கொள்ளும் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால், அடக்குமுறையைத் தான் பரிசாக அளிக்கிறது திமுக அரசு.

Advertisment

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது முடியாத காரியமல்ல. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.450 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். இது 2024-25ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகையான ரூ.44 ஆயிரத்து 42 கோடியில் ஒரு விழுக்காடு மட்டும் தான். ஆனாலும் அதை செய்ய தமிழக அரசுக்கு மனம் வரவில்லை.

அமைப்பு சார்ந்த சிறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் கூட, அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர் படிப்பு என எண்ணற்ற தகுதிகளுடன் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த உரிமைகள் எதுவும் கிடையாது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலா, இல்லையா? என்பதை தமிழக அரசு தான் விளக்க வேண்டும்.

பகுதி நேர ஆசிரியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் மிகக்குறைந்த ஊதியம் அவர்களின் குடும்பச் செலவுகளுக்கே போதாது எனும் நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவது தான் நியாயமாகும். ஆசிரியர்கள் கல்வி வழங்கும் கடவுள்கள். அவர்கள் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு, பொங்கல் திருநாள் ஊக்கத்தொகை போன்றவற்றுக்காக கையேந்தி நிற்கும் நிலையை அரசு உருவாக்கக் கூடாது. அது அரசுக்கு தான் அவமானம்.

எனவே, பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் உடனடியாக காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும். அத்துடன் அவர்கள் பொங்கல் திருநாளை க் கொண்டாட அவர்களின் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். அது தான் அவர்கள் 13 ஆண்டுகளாக செய்து வரும் தவத்திற்கு அரசு வழங்கும் வரமாக அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.