“நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி” - ராமதாஸ்

Ramadoss says 2 lakh mothers suffer due to lack of financial assistance

மகப்பேறு நிதியுதவியைஉடனடியாகவழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறுநிதியுதவிதிட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும்ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.

மகப்பேறு நிதியுதவி திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு சத்தான உணவு மற்றும் இணை உணவுகள் வழங்கப்பட வேண்டும்; குழந்தை பிறந்த பிறகு அக்குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டும் என்பது தான். ஆனால், இதற்கு மாறாக குழந்தை பிறந்து பல மாதங்களுக்குப் பிறகும், சில நிகழ்வுகளில் ஆண்டுகள் கடந்தும் கூட மகப்பேறு நிதியுதவி வழங்கப்படாததால் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடுகிறது. கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களைக் காப்பதற்கான மகப்பேறு நிதியை வழங்குவதில் காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாகவே மகப்பேறு நிதியுதவி முறையாக வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள்எழுப்பப்படுகின்றன. மத்திய அரசின் நிதியுதவியுடன் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதால், கருவுற்ற பெண்களின் விவரம், அவர்களுக்கு செய்யப்படும் மருத்துவ ஆய்வுகள், அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் போடப்படும் தடுப்பூசிகள் ஆகியவை குறித்த விவரங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு பதிவு செய்வதில் நிகழ்ந்த குளறுபடிகளால் தான் மகப்பேறு நிதி கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் குறை உடனடியாக களையப்பட வேண்டும்.

மகப்பேறு நிதியுதவி பெறும் பெண்கள் அனைவரும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த ஏழைகள் ஆவர். மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியும், பிற உதவிகளும் அவர்களுக்கு மிகப்பெரியவை ஆகும். அரசு நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடிகளால் ஏழைப் பெண்களுக்கு கிடைக்கும் உதவிகள் பாதிக்கப்படக் கூடாது. மகப்பேறு நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள குறைகளைக் களைந்து2 லட்சம் தாய்மார்களுக்கும் நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்கவும், இனி பதிவு செய்யும் கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் மகப்பேறு நிதி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss TNGovernment Women
இதையும் படியுங்கள்
Subscribe